சிங்கம் 3 - அம்மா கதாபாத்திரத்தில் அனுஷ்கா ?
சிங்கம், சிங்கம் 2ஆகிய இரண்டு பாகங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக மூன்றாவது பாகமாக சிங்கம் படத்தை ஹரி இயக்க உள்ளார். முதல் மற்றும் இரண்டாவது பாகங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சூர்யா - அனுஷ்கா இந்தப் படத்திலும் மீண்டும் ஜோடி சேர உள்ளனர். ஆனால், இந்த முறை மூன்றாவது பாகத்திலும் இருவரையும் காதலர்களாகவே ஹரி காட்டப் போவதில்லையாம். இரண்டு பாகங்களிலும் காதலர்களாக காட்டி இன்னும் அவர்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்காது என அவர்களுக்குப் படத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டாராம். அது மட்டுமில்லாமல், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் அனுஷ்காவைக் காட்ட உள்ளாராம். அதனால், அனுஷ்காவைக் கொஞ்சம் வெயிட் போடச் சொல்லியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா, உடல் எடைடையைக் கூட்டியும், குறைத்தும் நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிங்கம் படத்திற்காகவும் கூட்டிய எடையைக் குறைக்காமல் வைக்கலாமா என்றும் யோசித்து வருகிறார். சிங்கம் படத்தின் ஆரம்பத்திலேயே அனுஷ்கா - சூர்யா தம்பதியினருக்கு குழந்தை இருப்பதாகக் காட்ட உள்ளதாகவும் சொல்கிறார்கள். அப்படியென்றால் இரண்டாம் பாகத்தில் சூர்யாவை ஹன்சிகா காதலித்தது போல மூன்றாம் பாகத்தில் மற்றொரு நாயகியான ஸ்ருதிஹாசன் காதலிப்பாரா ? என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. போகிற போக்கில் அழகான அனுஷ்காவை 'ஆன்ட்டி'யாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.