எந்திரன்-2 படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கின !
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எந்திரன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். 2010ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலைக் குவித்தது. தற்போது ரஜினி - ஷங்கர் இருவரும் மீண்டும் இணைந்து 'எந்திரன் 2' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், கமல் மறுத்துவிட்டார். பின்னர் விக்ரம் நடிப்பதாக கூறப்பட்டது. இறுதியாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது அர்னால்டு பங்கேற்றார். அப்போது மேடையிலேயே தமிழ் படத்தில் நடிக்க ஷங்கர் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே எந்திரன் 2–ல் ரஜினியுடன் நடிக்க அர்னால்டை அணுகியுள்ளனர். ரஜினிக்கு இணையான கேரக்டராக அர்னால்டு பாத்திரத்தை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், 'எந்திரன் 2' படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கின்றன. காட்சிகள் வடிவமைப்பு அனைத்துமே முடிந்து, எந்த காட்சியில் கிராபிக்ஸ் எப்படி வர வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார் ஷங்கர். அதற்கான பணிகள் தொடங்கி இருக்கின்றன.
'எந்திரன் 2' படத்தில் நாயகனாக ரஜினி, ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் வழங்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.பிரம்மாண்டம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த படத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. ரூ. 250 கோடி செலவில் இந்த படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய படங்களில் அதிக பட்ஜெட் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
ரஞ்சித் படத்தை 2015ம் ஆண்டிற்குள் முடித்துவிட்டு, 2016ம் ஆண்டு தொடக்கம் முதல் 'எந்திரன் 2' படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி.