சர்வதேச அளவில் 16 மொழிகளில் தயாராகிறது 'கான்' !
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'கான்' திரைப்படத்தை, சர்வதேச அளவில் 16 மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். சிம்பு, கத்ரீன் தெரஸா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கான்' படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். யுவன் இசையமைத்துவரும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வருகிறார். GLO ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. "'கான்' படத்தை சர்வதேச மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். சினிமா ரசிகர்கள் இதை விரும்புவார்கள் என நம்புகிறேன்" என இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
சர்வதேச மொழிகளில் வெளியீடு குறித்து இயக்குநர் செல்வராகவனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சர்வதேச மொழிகளான ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட 16 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். சர்வதேச அளவில் வெளியிடும்போது பாடல்கள், காட்சிகள் உள்ளிட்டவற்றை நீக்குவது, சேர்ப்பது தொடர்பானவை அனைத்துமே படம் வெளியாகும் சமயத்தில் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார். இப்படத்தை தமிழில் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு, பணியாற்றி வருகிறது படக்குழு.