ஆட்ட நாயகனாக அசத்திய முஸ்டாபிசுர் ரகுமான்
மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் இரவு நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டினார் வங்கதேச இளம் வேகம் முஸ்டாபிசுர் ரகுமான். அறிமுக வீரராகக் களமிறங்கிய அவர் 9.2 ஓவரில் ஒரு மெய்டன் உள்பட 50 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த இளம் வீரரின் (19 வயது 287 நாள்) சர்வதேச அனுபவம் என்று பார்த்தால் ஒரு டி20, ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே. ஒரே நாளில் இன்று வங்கதேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கதாநாயகனாகவும் உயர்ந்துள்ளார் முஸ்டாபிசுர்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த இளைஞர் வங்கதேச யு-17 மற்றும் யு-19 அணிகளுக்காக விளையாடி, தற்போது தேசிய அணியிலும் இடம் பிடித்து, முதல் போட்டியிலேயே திறமையை நிரூபித்துள்ளார்.எதிர்பாராத வகையில், குறைந்த வேகத்தில் பந்துவீசி பேட்ஸ்மேனை தடுமாறச் செய்யும் இவரது வியூகத்துக்கு ரோகித், ரகானே, ரெய்னா, அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலியானது குறிப்பிடத்தக்கது. மிர்பூரில் நாளை நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டியிலும், இவரது பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.