ஜுவாலா ஜோடி சாம்பியன்
கனடா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. கனடாவில் உள்ள கால்கரி நகரில், கனடா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜுவாலா, அஷ்வினி ஜோடி, நெதர்லாந்தின் எப்ஜே மஸ்கென்ஸ், செலினா பியக் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டில் இரு ஜோடிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் 19–19 என, சமமாக இருந்தது. இறுதியில் ஜுவாலா ஜோடி 21–19 என, முதல் செட்டை கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜுவாலா ஜோடி 21–16 என, எளிதாக வென்றது.
35 நிமிடங்கள் மட்டும் நடந்த போட்டி முடிவில், ஜுவாலா, அஷ்வினி ஜோடி 21–19, 21–16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடிக்கு பரிசாக ரூ. 32 லட்சம் கிடைத்தது. கடந்த 2012ல் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு இருவரும் இணைந்து விளையாடாமல் இருந்தனர். சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் இணைந்து விளையாடிய போதும், கடந்த 3 ஆண்டுகளில் கோப்பை வெல்லவில்லை. இந்நிலையில் முதன் முறையாக இருவரும் இணைந்து நேற்று பட்டம் வென்றனர். இது குறித்து அஷ்வினி கூறியது:
நானும், ஜுவாலாவும் கடந்த ஆண்டு முதல் சிறப்பாகத் தான் செயல்பட்டு வருகிறோம். உபெர் கோப்பை, இன்ச்சான் ஆசிய விளையாட்டில் வெண்கலம், கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெள்ளி வென்றோம். சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு, யு.எஸ்.ஓபன் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறினோம். இப்படி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், எந்த தொடரிலும் பட்டம் வெல்லாமல் இருந்தோம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது கோப்பை வென்றது மகிழ்ச்சி தருகிறது. அடுத்து நடக்க உள்ள உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கு (இந்தோனேஷியா, ஆக., 10–16) இந்த வெற்றி மிகவும் ஊக்கமாக இருக்கும்.