கோபா அமெரிக்க கால்பந்து: பைனலில் சிலி அணி
கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் பைனலுக்கு சிலி அணி முன்னேறியது. சொந்த மண்ணில் நடந்த விறுவிறுப்பான அரையிறுதியில் பெரு அணியை 2–1 என வீழ்த்தியது. தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் சிலி, பெரு அணிகள் மோதின. போட்டியின் 42வது நிமிடத்தில் சிலி அணியின் வர்காஸ் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் (60வது நிமிடம்) சிலி அணி வீரர் கேரி மெடல் ‘சேம் சைடு’ கோல் அடிக்க, இரு அணியும் சமநிலையானது. இதன் பின் அடுத்த சில (64) நிமிடத்தில் மீண்டும் வர்காஸ் கோல் அடித்து, சிலி அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். கடைசி வரை எதிரணியால் இதற்கு பதிலடி தர முடியவில்லை. முடிவில், சிலி அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இதன் மூலம் இத்தொடரில் 28 ஆண்டுகளுக்குப்பின் சிலி அணி பைனலுக்கு முன்னேறியது. இதற்கு முன், கடந்த 1987ல் பைனலுக்கு முன்னேறி, இரண்டாவது இடம் பிடித்தது.