டி.ராஜேந்தரை விமர்சிக்க தமிழ்நாட்டில் யாருக்கும் அருகதை கிடையாது!-
டைரக்டர், நடிகர் டி.ராஜேந்தரை விமர்சிக்க தமிழ்நாட்டில் யாருக்கும் அருகதை கிடையாது என்கிறார் டைரக்டர் பேரரசு.அவர் மேலும் கூறும்போது, இங்கே தலைவன்னு சொன்னாலே பிரச்சினை வருது. ஆனாலும் சொல்றேன் என்னோட தலைவர் டி.ராஜேந்தர் அவர்கள். நான் அவரோட தீவிர ரசிகன். ராகம் பல்லவி, நெஞ்சில் ஓர் ராகம், உயிருள்ளவரை உஷா மற்றும் அவர் இசையமைத்த படமாக இருந்தால்கூட எங்க ஊரில் இருந்து 60 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று படம் பார்ப்பேன்.அப்படிப்பட்ட நான் அஜித் நடித்த திருப்பதி படத்தை இயக்கிக்கொண்டிருந்த போது ஒருநாள் சிம்புவிடமிருந்து போன் வந்தது. வல்லவன் படத்துக்கு ஒரு பாட்டு எழுதணும் என்றார். எப்ப சார் வேணும் என கேட்டேன். நாளைக்கு ஈவினிங் வேணும் என்றார். நான் நேரம் இல்லாததால் தயங்கினேன். அப்போது அந்த பாட்டை அப்பாதான் பாடுறாங்க என்றார். எனக்கு சந்தோசம் தாங்கல. பேரரசு பாடலை டி.ஆர் பாடுகிறார் என்று நினைக்கும்போதே பெருமையாக இருந்தது.ஒரு காலத்துல அவர் எழுதிய பாடல்களை நான் மனப்பாடம் செய்தேன். இன்னைக்கு நான் எழுதுன பாடலை டி.ஆர் பாடப்போகிறார் என்ற சந்தோசத்தோடவே, திருப்பதி படப்பிடிப்பு இடைவெளியில், அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தரியாடீ -என்ற அந்த பாடலை எழுதினேன். அது எனக்கு கிடைத்த ஒரு வரம். அதன்பிறகு நான் இசையமைத்த படத்திலேயும் அவர் பாடி எனக்கு பெருமை சேர்த்தார். மேலும், தமிழ் சினிமாவில பெரிய ஸ்டார் நடிகர்களோட படங்களெல்லாம் 90 லட்சம் வரை வசூலித்துக்கொண்டிருந்தபோது ஒரு கோடி வரை டிஆர் படங்கள் வசூலித்தன. அதோடு, இசையை படிச்சிட்டு இசையமைப்பாளராகிறது பெரிய விசயமல்ல. ஆனா இசையை கத்துக்காமலேயே சுய இசை ஞானத்தால் இசையமைத்து அந்த காலகட்டத்துல நம்பர்-ஒன் இசையமைப்பாளர்களின் கேசட்டுகளை விட இவர் இசையமைத்த படங்களின் கேசட்டுகள் அதிக விற்பனை ஆகின.
ஹீரோன்னா அழகா இருக்கனும், ஹைட்டாக இருக்கனும், கலரா இருக்கனும் என்று இருந்த இலக்கணங்களை தவிடுபொடியாக்கி அப்போது முன்னணியில் இருந்த ஹீரோக்களுக்கு இணையாக அவருக்கும் மாஸ் இருந்தது. அப்படிப்பட்ட டி.ஆரை தவறாக விமர்சிக்கிறதுக்கு தமிழ்நாட்டில் யாருக்குமே அருகதை இல்லை. அதிர்ஷ்டத்தில் ஜெயிச்சவன் சுவர் விளம்பரம் மாதிரி. அப்போதைக்கு பளிச்சினு தெரிவான். போகப்போக அது மங்கிப்போகும். ஆனால் திறமையால ஜெயிச்சவங்க கல்வெட்டு மாதிரி. என்னைக்கும் அழியாம இருப்பாங்க. டி.ஆர் புகழ் கல்வெட்டு மாதிரி. என்றைக்கும் அழியாமல் இருக்கும் என்கிறார் பேரரசு.