"புலி டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்ட வாலிபர் கைது"
விஜய் நடித்த புலி படத்தின் டீசர் இன்று அவரது பிறந்த நாளையட்டி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் டீசர் நேற்று மதியம் 12 மணியளவில் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் ஆகியோர் படத்தின் டீசர் பணிநடந்த ஸ்டூடியோவுக்குசென்று புகார் கூறினர்.இதைத் தொடர்ந்து ஸ்டூடியோ நிர்வாகம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அங்கு புதிதாக இன்டென்ஷிப் மாணவராக சேர்ந்திருந்த மிதுன் என்ற இளைஞர் அதை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டூடியோ மேலாளர் உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்து, மிதுன் மீது புகாரும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் கூறும்போது: வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுக்கிறோம். பல ஆயிரம் பேரின் உழைப்பு, விஜய்யின் 140 நாள் நடிப்பு அத்தனையையும் யாரோ ஒருவர் ஒரு நொடியில் வீணாக்குகிறார் என்றால் இதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும். இன்று 50 விநாடி டீசரை வெளியிட்டவர் நாளை இரண்டு ரீலை வெளியிட எவ்வளவு நேரமாகும். படத்தின் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளோம். என்றார்.