"இன்று நேற்று நாளை - விமர்சனம்"
ஆங்கில படங்களிலேயே இதுநாள் வரை நம் ரசிகர்கள் கண்டு வந்த டைம் மிஷன் எனப்படும் நாம் விரும்பும் காலத்திற்கு நம்மை அழைத்து செல்லும் ஒரு கருவியை மைய கருவாக கொண்டு, தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அறிவியல் பூர்வமான கதையை உள்ளிடக்கிய படமும், கதையும் தான் இன்று நேற்று நாளை படத்தின் மொத்த கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!
கதைப்படி, படத்தின் ஓபனிங் சீனிலேயே கெஸ்ட் ரோலில் வரும் நடிகர் ஆர்யா ஒரு டைம் மிஷனை கண்டுபிடித்து, அதை நவீன யுகத்தில் செயலுக்கு கொண்டு வர ஸ்கைப் சாட்டிங் மூலம் அறிவியல் துறையை சேர்ந்த பேராசிரியரிடம் பர்மிஷன் கேட்கிறார். அந்த பேராசிரியரும், சரியாக இருக்கும் என்றால் உன் இஷ்டம் போல் செய் என்று அனுமதி வழங்குகிறார். அந்த டைம் மிஷின், அங்கு தொட்டு இங்கு தொட்டு நண்பர்களான, டூபாக்கூர் ஜோசியர் புலிவெட்டி ஆறுமுகம் எனும் கருணாகரனின் கைகளிலும், வேலை வெட்டிக்கு போகாமல் சொந்த தொழில் செய்வதே லட்சியம் என்று இருக்கும் இளங்கோ எனும் விஷ்ணுவின் கைகளிலும் சிக்குகிறது. அதை வைத்து கொண்டு ஹீரோ விஷ்ணு விஷாலும், காமெடியன் கருணாகரனும் பல வருடங்களுக்கு முன்னும், பின்னும் போய் காட்டும் கண்கட்டி வித்தை தான் இன்று நேற்று நாளை'' படத்தின் மொத்த கதையும்! அதை ஹீரோ விஷ்ணு, தன் கைநழுவிப்போக இருக்கும் காதலுக்காகவும், காமெடியன் கருணாகரன் தனக்கு தெரியாத ஜோதிடத்தை தெரிந்த மாதிரி மக்களை நம்ப வைத்து பிழைப்பு நடத்தவும்... பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் சந்தோஷத்தையும், வில்லங்கத்தையும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், காட்சிக்கு காட்சி காமெடியாகவும், கலர்புல்லாகவும் காட்டி ரசிகர்களை சீட்டோடு கட்டி போடுகின்றார் இயக்குநர் ஆர்.ரவிக்குமார்! விஷ்ணு, தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு படத்தின் கதையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து ஜெயித்து கொண்டு வருகிறார்.
அறிவியல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும் ஒவ்வொரு சீனிலும் ஹீரோ விஷ்ணு விஷால் நடிப்பில் தனி முத்திரை பதித்து ரசிகர்களை தன் வயப்படுத்துகிறார். விஷ்ணு மாதிரியே காமெடியன் கருணாகரன், அனுவாக வரும் கதாநாயகி மியா ஜார்ஜ், வில்லன் குழந்தை வேலு - ரவிசங்கர், விஞ்ஞானி பார்த்தசாரதி - டிஎம் கார்த்திக், கதாநாயகி அனுவின் அப்பாவும், பெரும் தொழிலதிபர் ராஜரத்தினமுமான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். மேற்படி நட்சத்திரங்கள் மாதிரியே, படத்தின் இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா ஆதி, ஔிப்பதிவாளர் ஏ.வசந்த், படத்தொகுப்பாளர் லியோ ஜான்பவுல் மற்றும் கலை இயக்குநர் விஜய் ஆதிநாதன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள் பணியை சரியாக செய்து இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் இயக்கத்தில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத தரமான அறிவியல் படத்தை கலக்கல் காமெடியுடனும், கண்ணை கட்டும் கலர்புல்லுடனும், கலை நயம் சொட்டும் காதல் காட்சிகளுடனும் தர முற்பட்டிருக்கின்றனர்.
ஆக மொத்தத்தில், இன்று நேற்று நாளை இன்று மட்டுமல்ல, நாளையும் பேசப்படும் நல்ல படமாகும்!