விராத் கோஹ்லி "அம்பயர் தீர்ப்பு "மறுபரிசீலனைக்கு ஆதரவு
அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.,’) முறைக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதை துவக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் பி.சி.சி.ஐ., என்ன செய்ய போகிறது என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கொண்டு வரப்பட்டது அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை. இதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால், துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பி.சி.சி.ஐ.,யின் அப்போதைய தலைவர் சீனிவாசன், இந்திய அணி கேப்டன் தோனியும் இதை கடுமையாக குறை கூறினர். இதனால் இந்தியா பங்கேற்கும் இரு நாடுகள் கொண்ட தொடர்களில் டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்பட மாட்டாது.
கடந்த ஆண்டு இதுகுறித்து கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ 100 சதவீத நம்பகத்தன்மை இருந்தால் ‘டி.ஆர்.எஸ்., குறித்த இந்திய அணியின் நிலையில் மாற்றம் வரும்,’’ என தெரிவித்திருந்தார். இதனிடையே டெஸ்ட் அணி கேப்டனாக வந்துள்ள கோஹ்லி இம்முறையை வரவேற்றுள்ளார்.
கோஹ்லி கூறுகையில்,‘‘ ஒவ்வொரு முறை பத்திரிகையாளர் சந்திப்பில் ‘டி.ஆர்.எஸ்.,’ குறித்து கேள்வி எழுகிறது. இது எனக்குத் தெரியும். இதனால் இம்முறை குறித்து ஆராய்ந்து, பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கின்றனர் என்று கேட்டு அறியப் போகிறேன். இதுகுறித்து கட்டாயம் சரியான இடத்தில் விவாதிக்கப்படும் என்பது மட்டும் உறுதி,’’ என்றார்.மறுபரிசீலனைக்கு