"யாகாவாராயினும் நாகாக்க - விமர்சனம்"
‘இன்னும் கொஞ்ச நாள் நட்போடு ஜாலியாக இருப்போம்’ என்று கல்லூரி தேர்வை கட் அடித்துவிட்டு கோவா வில் கும்மாளமடிக்கிற நண்பர்கள் ஆதி அண்ட் கோ. நண்பர்களில் ஒருவன் எம்.பியின் மகன், ஒருவன் போலீஸ் கமிஷனர் மகன். ஒரு புத்தாண்டு கொண்டாட்டப் போதையில் நண்பர்கள் ஒரு பெரிய வம்பை விலைகொடுத்து வாங்கி விடுகிறார்கள். அந்த வம்பு, ஆதியை மும்பை வரைக்கும் வரவைத்து ரத்தம் கக்க வைக்கிறது. அவர்கள் வம்பு செய்தது மும்பையின் நிழல் உலக தாதாவின் மகளிடம். தாதாவின் கோபம் இவர்கள் பக்கம் திரும்புகிறது. நண்பர்களை அவரவர் பெற்றோர் மறைத்து வைத்துக் கொள்கிறார்கள். ஆதி, நடுத்தர வர்க்கம் என்பதால் நடுத்தெருவில் நிற்கிறார். நண்பர்களை காப்பாற்றுவதற்காக தாதாவிடம் மன்னிப்புக் கேட்க, மும்பை செல்கிறார். அங்கு போனபோதுதான் தாதா மகள் காணாமல் போன செய்தி தெரிகிறது. ஆதியின் பெற்றோரை கடத்தி வைத்திருக்கும் தாதா, நண்பர்களை ஒப்படைத்துவிட்டு குடும்பத்தை அழைத்துச் செல்ல கெடுவிதிக்கிறார். நட்பா குடும்பமா? தாதா மகள் என்ன ஆனார்? என்பதுதான் பரபரக்கும் கதை.
பொறுப்பில்லாத நடுத்தர குடும்பத்து இளைஞனை கண்முன் நிறுத்துகிறார் ஆதி. அடாவடி பெண்ணான நிக்கியை காதலித்துவிட்டு பின்பு கழற்றி விட தவிக்கிற லவ் ஏரியாவிலும் கலக்குகிறார். நண்பர்களுக்காக எதிரிகளிடம் கெஞ்சும்போதும், அவர்கள் மிஞ்சும்போது எகிறி அடிக்கும்போதும் ஆக்ஷனில் புகுந்து விளையாடுகிறார். சிக்ஸ் பேக் உடம்பு, காமெடி, நடிப்பு, சண்டை என கற்ற வித்தைகள் அனைத்தையும் இறக்கியிருக்கிறார். ‘காதலை சொல்றது மட்டும்தான் உன்னோட வேலை. வேணுமா வேண்டாமான்னு தீர்மானிக்கிறது பொண்ணுங்களோட வேலை’ என நிக்கி கல்ராணி அதகளம் பண்ணுகிறார். பின்பகுதி படம் ஆக்ஷனுக்குள் சென்றுவிடுவதால் அவருக்கு பெரிதாக வேலையில்லை. முதன் முறையாக தமிழ் படத்தில் மிதுன் சக்ரவர்த்தி. ‘நாயகன்’ வேலு நாயக்கரை நினைவுபடுத்துகிற மும்பை முதலியாராக நடித்திருக்கிறார். தீர்க்கமான பார்வை, குறைந்த பேச்சு, கொஞ்சம் சென்டிமென்ட் என அசல் முதலியாராக வாழ்ந்திருக்கிறார். ‘உங்க அப்பா அம்மா என்கிட்ட இருக்காங்க. ஆனா, என் மகள் எங்கேன்னு தெரியலையேடா’ என அவர் உருகும்போது நெகிழ வைக்கிறார். ரிச்சா பலோட் ரீ என்ட்ரி கச்சிதம். ‘நீ யாரு மேல கைவச்ச தெரியுமாடா?’ என அவர் போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடிக்கும் அந்த ஒரு காட்சியிலேயே தன்னை நிறுத்திவிடுகிறார். கெட்டவராக அறிமுகமாகி நல்ல தாதாவாகும் பசுபதி, இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ், கமிஷனர் நாசர் என அனைவரும் சிறப்பு. இசை அமைப்பாளர்கள் பிரஷன், பிரவீன், ஷியாம் பின்னணி இசைக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்.
ஹீரோ, நண்பர்கள், குடும்பம், தாதாக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என வெரைட்டியான கேரக்டர் இருந்தாலும் அந்ததந்த கேரக்டர்களின் நியாயத்தோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். வீட்டுக்குள் உருப்படாதவன் என்ற இமேஜோடு வலம் வரும் ஹீரோவை, படத்தின் முடிவுவரை அதே இமேஜோடு காட்டியிருப்பது துணிச்சல். பரபரவென பறக்கும் படம், கடைசி 30 நிமிடத்தில் தள்ளாட ஆரம்பிக்கிறது. கிளைமாக்சில் சொல்லப்படும் கிளைக்கதை தனித்து நிற்கிறது. அமைச்சர்களே பயந்து நடுங்கும் ஒரு தாதா, தன் செல்லமகள் யாரை காதலிக்கிறாள்? காதலன் பின்னணி என்ன என்று கண்காணிக்காமலா இருப்பார்? என்பது போன்ற சில லாஜிக் மிஸ் இருந்தாலும், ‘கோபத்தில் வார்த்தை தவறினால், வாழ்க்கை தவறிப்போகும்’ என்கிற மெசேஜை ஆக்ஷனில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.