''காவல்''-விமர்சனம்







                                                            சென்னை தாதா ஒருவரை என்கவுண்ட்டர் செய்ய நினைக்கிறது காவல்துறை, அதற்குக் காவல்துறையில் இருப்பவர்களாலேயே தடை ஏற்படுகிறது, அவற்றை உடைத்து அந்த தாதாவை காவல்துறை கொன்றதா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் காவல்.   காவல்துறைக்கும் ரவுடிக்கும் நடக்கும் மோதல் என்றால் என்னவெல்லாம் நமது கற்பனையில் வருமோ அவ்வளவும் பிசகாமல் படத்தில் இருக்கிறது. துடிக்கத்துடிக்கக் கொலை செய்யும் ரவுடிகள், கழுத்தை மறைக்கும் அளவுக்குத் தடித்தடியாகத் தங்கச்சங்கிலிகள் அணிந்து கொண்டிருக்கும் ரவுடிக்கூட்டத்தலைவன், எந்நேரமும் சாராயம் குடிப்பது போன்ற வழக்கமான அம்சங்களோடு, விதவிதமான கத்திகளைத் துடைத்துவைத்து அவற்றைத் தெய்வம் என்று வர்ணிப்பதும் ஒரேயொரு கத்தியை இது விளங்காதது, நாலு வேலைக்குப் போய் ஒண்ணும் நடக்கல என்று வில்லன் சொல்லும் காட்சி புதிது.  தலைமைக்காவலர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனாக நாயகன் விமல். காவலர்களின் பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ அதற்குக்கொஞ்சமும் மாற்றமில்லாமல் இருக்கிறார். நண்பர்களோடு சேர்ந்து குடிப்பது, ஊர்சுற்றுவது, நடுவே நாயகி கீதாவைக் காதலிப்பது ஆகியனவற்றைச் சரியாகச் செய்கிறார். பெரும்பாலான படங்களில் கதாநாயகிகளுக்கு எவ்வளவு வேலை இருக்குமோ அவ்வளவு வேலைதான் இந்தப்படத்தில் விமலுக்கு. இரண்டுபாடல்களில் கீதாவோடு ஆடுவதும் இல்லையென்றால்... கடைசியில் அவர் கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து அவரைப் பாதுகாத்திருக்கிறார்கள்.

                                                                கதைப்படி நாயகன் என்றால் அது சமுத்திரக்கனிதான். மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். கடற்கரையில் பலூன் விற்பவராக நடித்து ரவுடியைப் பற்றித் தெரிந்துகொள்கிறார் என்பதெல்லாம் அரதப்பழசு.தன் நடிப்பால் அந்தக்குறையைக் குறைக்கிறார் சமுத்திரக்கனி.

                                                                என்கவுண்ட்டரை நியாயப்படுத்தி அவர் பேசும் பேச்சுகள் மேம்போக்காகப் பார்த்தால் மிகநியாயமாகத் தோன்றும். மனிதஉரிமைகள் ஆணையத்தைக் கிண்டல் செய்திருப்பது இயக்குநரின் போதாமையைக் காட்டுகிறது. நாயகியாக கீதா. நாயகனுக்கே அதிகவேலை இல்லாத இந்தப்படத்தில் நாயகிக்கு என்ன வேலை இருந்துவிடும்? ஊறுகாயைவிடக் குறைவாகப் பயன்பட்டிருக்கிறார்.



                                                                    காவலர்களாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இமான்அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோரை ஏதாவதொரு காவல்நிலையத்தில் கொண்டுபோய்விட்டால் உண்மைக்காவலர்களே ஏமாந்துபோயவிடுவார்கள் அந்தளவுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர், ரவுடிக்கூட்டத்தலைவனைப் பார்த்து ம்முருகா,,, என்று ராகம் இழுத்துக் கைதட்டல் பெறுகிறார். கடைசியில் மகனைக் காப்பாற்றவேண்டும் என்று கண்ணீர்விட்டுக் கதறும் இடத்தில் அவரும் இமான்அண்ணாச்சியும் நன்றாக நடித்திருக்கிறார்கள். காவல்நிலையத்துக்கு எதிரேயே சட்டஉதவிமையம் நடத்திக் காசு பார்க்கும் வேடத்தில் நடித்திருக்கும் நமோநாராயணனின் வேடத்தை வைத்துச் சில இடங்களில் சிரிக்கவைப்பதோடு, இடைத்தரகர்களின் வாழ்நிலை அவர்களை அதிகாரவர்க்கம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதைச் சொல்லுவதோடு மக்கள் அந்தமாதிரி ஆட்களை நம்புவதையும் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்திருக்கும் ஏகாம்பரம் தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. காவல்நிலையத்தில் காவலர்கள் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் எனபனவற்றைக் காட்சிப்படுத்தியதோடு, நேர்மையான காவல்அதிகாரி பாத்திரத்தையும், திருமணமாகி ஒரு வாரத்திலேயே அநியாயமாகச் செத்துப்போகும் காவல்அதிகாரி பாத்திரம் ஆகியனவற்றை வைத்துச் சமன் செய்திருக்கிறார் இயக்குநர் நாகேந்திரன்.



                                                                நேற்றுவரை அமைச்சரோடு சுற்றியவனை திடீரென்று காவல்துறை கொன்றுவிடுவது சரியாக இருக்காது என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, முதலமைச்சரின் உத்தரவு என்று அமைச்சரே தன் சகாக்களிடம் சொல்வது போலக் காட்சியமைத்து தன் இருப்பைக் காட்டும் இயக்குநர், புதிதாகக் கதைதேடுவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் காவல் இன்னும் பலமாக இருந்திருக்கும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]