வங்கி கணக்கை பாதுகாக்க......
எலக்ட்ரானிக் யுகத்தில் நமது பலவிதமான கணக்குகளை பாதுகாக்க வெவ்வேறு விதமான ரகசிய குறியீட்டு முறைகள் உள்ளன. வங்கிக் கணக்கை பொறுத்தவரை பொதுவாக எண்கள் மற்றும் எழுத்துகள் கலந்த குறியீட்டுச் சொற்களே பாதுகாப்பு முறையாக உள்ளது. இதைவிட சிறந்த பாதுகாப்பு முறையை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இங்கிலாந்தின் 'இன்டலிஜென்ட் என்விரான்மென்ட்ஸ்' நிறுவனம் ஈமோஜி எனப்படும் பாஸ்வேர்டு முறையை உருவாக்கி உள்ளது.
ஸ்மைலி போன்ற 44 விதமான படங்களைக் கொண்டது இந்த குறியீட்டு முறை. இவற்றில் 4 படங்களை தேர்வு செய்து நமக்கான ரகசிய குறியீடாக வடிவமைத்துக் கொள்ளலாம். இவற்றை வரிசை மாற்றி அமைத்து 35 லட்சம் வகையான பாஸ்வேர்டுகளை உருவாக்க முடியும். அனைத்துப் படங்களும் நம் அன்றாட நிகழ்வுடன் தொடர்புடையதாக இருப்பதால் இவற்றை 'பின்' நம்பர்களைவிட எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். அதே வேளையில் தகவல் திருடர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பாதுகாப்புத் தன்மையை கொண்டது. இந்த ஈமோஜி பாஸ்கோடு அப்ளிகேசன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும். அந்த நிறுவனம் இதை பொது பயன்பாட்டிற்கு விட முடிவு செய்துள்ளது.