‘உலகின் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும்’ வங்காளதேச கேப்டன் மோர்தசா நம்பிக்கை !....
மிர்புரில் நேற்று முன்தினம் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது. இதில் இந்தியா நிர்ணயித்த 318 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசம் 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. என்றாலும் வங்காளதேச அணி இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. வங்காளதேச அணியின் திடீர் எழுச்சி கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இது கூறித்து மோர்தசா கூறியதாவது:-
2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நாங்கள் முதல் முறையாக கால்இறுதி வரை முன்னேறி சாதனை படைத்தோம். அதை தவிர்த்து பார்த்தால், இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதே எங்களது மிகச்சிறந்த செயல்பாடாகும். ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 4 இடங்களுக்குள் உள்ள அணிகளுக்கு எதிரான தொடரை இதற்கு முன்பு நாங்கள் வென்றதில்லை. அந்த வகையில் இந்தியாவுக்கு (தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் அணி) எதிரான தொடரில் கிடைத்த இந்த வெற்றியை, மிகச்சிறந்தது என்று சொல்வேன். இங்கிலாந்தின் ஜெப்ரி பாய்காட், எங்களது அணி வெளிநாட்டில், அதுவும் பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை குவிக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருக்கிறார். வெளிநாட்டு மண்ணில் பெரும்பாலும் ஒவ்வொரு அணிகளும் தடுமாறத்தான் செய்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் அங்குள்ள சீதோஷ்ண நிலையை சமாளித்து ஆடுவது எளிதான விஷயமல்ல. அப்படிப்பட்ட நிலையிலும் அங்கு உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.
உலகின் எந்த இடத்திலும் தற்போதைய எங்கள் அணியால் சிறப்பாக விளையாட முடியும். எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் எங்களால் வெற்றி பெற முடியும். அந்த நம்பிக்கை எல்லா வீரர்களுக்கும் இருக்கிறது.