அணியில் கேப்டன் கூறினால் உயிரை கொடுப்பேன் * அஷ்வின் உருக்கம்...
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி கேப்டன் தோனி பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தவிர, அணியில் வீரர்களுக்குள் ஒற்றுமையின்மை காரணமாகத் தான் இந்த தோல்வி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியது:
கேப்டன் தோனி இந்தியாவுக்காக நிறைய பெருமை சேர்த்துள்ளார். இதை நாம் மறந்து விடக்கூடாது. மோசமான தோல்விகள் வரும் போது, பழைய புள்ளி விவரங்கள் எடுபடாது எனத் தெரியும். அதேநேரம் அணியின் ஒட்டுமொத்த தோல்விக்காக கேப்டன் தோனியை மட்டும் குற்றம் சுமத்தக் கூடாது.
இக்கட்டான நேரத்தில் தான் கேப்டனுக்கு ஆதரவு தர வேண்டும். இப்போது இல்லாமல் அப்புறம் எப்போது இதைச் செய்வது. ராணுவத்தில் கேப்டனை பின்தொடர்ந்து செல்லவில்லை எனில் குண்டுகள் துளைக்கலாம். இந்திய அணியிலும் அப்படித்தான், என்னைப் பொறுத்தவரையில் ஒருவேளை களத்தில் மரணம் அடையும்படி கேப்டன் கூறினால், அப்படியே செய்து விடுவேன்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் விளையாடவில்லை என்பதே உண்மை. இதற்காக வீரர்கள் ‘டிரசிங் ரூமில்’ எவ்வித குழப்பமும் இல்லை.
எப்போதும் போன்ற சூழல் தான் உள்ளது. இன்றைய போட்டியில் எங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடி வெற்றிக்கு முயற்சிப்போம்.
வங்கதேச அணி வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் சிறப்பாக செயல்படுகிறார். இவரின் திறமைக்கு மதிப்பு தருகிறோம். இதற்காக இவரை கடத்திச்செல்லவா முடியும். இவரின் பந்துவீச்சை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என சிந்திப்போம்.
இவ்வாறு அஷ்வின் கூறினார்.
இதேபோல கேப்டன் தோனிக்கு ரெய்னாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.