தோனியை ‘மிஸ்’ பண்ணுகிறேன் * கோஹ்லி உருக்கம்
கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகளை முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் பாராட்டினர்.
கோஹ்லியை பொறுத்தவரை தோனி மீதான தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாதவராக உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியது:
வங்கதேசத்துக்கு எதிரான பதுல்லா டெஸ்ட் போட்டியின் போது, வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’(ஓய்வறையில்) தோனியை ‘மிஸ்’ பண்ணியது புதுமையான உணர்வாக இருந்தது. இதே போன்ற ஒரு சூழல் சச்சின் ஓய்வு பெற்ற போதும் ஏற்பட்டது.
ஒரு கிரிக்கெட் வீரராக தோனியுடன் தான் பெரும்பாலான நேரத்தை செலவிட்டோம். இவர் சொல்வதை கேட்டோம். அவருடன் பல விஷயங்கள் பற்றி விவாதித்தோம். இவரது அணுகுமுறை அணியுடன் கலந்திருந்தது. இப்படி இந்திய அணியில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வீரரை திடீரென காண முடியவில்லை. இவரது குரல் மட்டும் எங்கள் மத்தியில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது' என்று கூறினார்.