இந்திய அணி வெற்றி: தவான், ரெய்னா அசத்தல்




                                                     மூன்றாவது ஒருநாள் போட்டியில் தவான், தோனி, ரெய்னாவின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்று மானம் காத்தது. வங்கதேச அணி 2–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

வங்கதேசம் சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலிரண்டு போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, ஏற்கனவே தொடரை இழந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் மொர்டசா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.                            

இந்திய அணியின் ‘பேட்டிங்’ இம்முறை திருப்தியாக இருந்தது. ரோகித் சர்மா 29 ரன்கள் எடுத்தார். அராபத் சன்னி வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 14வது அரைசதம் அடித்தார். சாகிப் அல் ஹசன் ‘சுழலில்’ கோஹ்லி (25) போல்டானார்.

தோனி பொறுப்பாக ஆடினார். நாசிர் ஹொசைன் வீசிய 23வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தவான் (75) நம்பிக்கை தந்தார். கேப்டன் பதவிக்கு ஏற்பட்ட நெருக்கடியை கடந்து அபாரமாக ஆடிய தோனி, ஒருநாள் அரங்கில் தனது 59வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது அம்பயரின் தவறான தீர்ப்பால் அம்பதி ராயுடு (44) துரதிருஷ்டவசமாக அவுட்டானார். மொர்டசா பந்தில் தோனி (69) நடையைக் கட்டினார்.          

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரெய்னா (38), ரூபெல் ஹொசைன், மொர்டசா பந்துகளை சிக்சருக்கு விளாசினார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் (10), ஸ்டூவர்ட் பின்னி (17) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் மொர்டசா 3, முஸ்தபிஜுர் 2 விக்கெட் கைப்பற்றினர்.          



                                                கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு  இந்திய பவுலர்கள் ஆரம்பத்திலேயே ‘செக்’ வைத்தனர். தமிம் இக்பால் (5) விரைவில் அவுட்டானார். குல்கர்னி பந்தில் சவுமியா (40) அவுட்டானார். ரெய்னா ‘சுழலில்’ முஷ்பிகுர் (24) சிக்கினார். லிட்டன் தாஸ் (34), அக்சர் படேல் பந்தில் போல்டானார். சாகிப் அல் ஹசன் (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ஸ்டூவர்ட் பின்னி வீசிய 32வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய சபிர் ரஹ்மான் (43) அதே ஓவரில் அவுட்டானார். அஷ்வின் பந்தில் கேப்டன் மொர்டசா (0), நாசிர் ஹொசைன் (32) வெளியேறினர்.
வங்கதேச அணி 47 ஓவரில் 240 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரை 3–0 என வெல்லலாம் என்ற கனவு தகர்ந்தது.
இந்தியா சார்பில் ரெய்னா 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.  ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் ரெய்னா வென்றார். தொடர் நாயகன் விருதை வங்கதேசத்தின் முஸ்தபிஜுர் ரஹ்மான் கைப்பற்றினார்.

வங்கதேச அணி 2–1 என இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன்முறையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url