ஸ்ருதி ஹாசன் படத்துக்கு மும்பை டாக்டர்கள் எதிர்ப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம் ‘ரமணா’. விஜயகாந்த், சிம்ரன் நடித்திருந்தனர். இப்படம் இந்தியில் ‘கப்பர் இஸ் பேக்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி ரிலீசானது. கிரிஷ் இயக்கினார். அக்ஷய குமார், ஸ்ருதி ஹாசன் நடித்தனர். இப்படம் திரைக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. படமும் ஹிட்டானது. இந்நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மும்பை டாக்டர்கள் சங்கத்தினர் தற்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்தியன் மெடிக்கல் சங்க தலைவர் டாக்டர் அகர்வால் இது பற்றி கூறியது: படத்தில் டாக்டர்களை பற்றியும் மருத்துவமனை பற்றியும் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலுக்கு சிகிச்சை அளித்து அதற்கு கட்டணம் வசூலிப்பதுபோல் காட்சிகள் இடம்பெறுகிறது. இதுபற்றி பட குழுவினரிடம் கூறி காட்சிகளை நீக்க சொன்னபோது அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே இதற்கு தணிக்கை சான்றிதழ் அளித்த சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அவர்கள் அதை நீக்க உத்தரவிடாவிட்டால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவோம் என்றார்.