கேப்டன் தோனிக்கு அபராதம்
வங்கதேச வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மானை இடித்துத் தள்ளியது தொடர்பாக, இந்திய அணி கேப்டன் தோனிக்கு போட்டி சம்பளத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தியா வங்கதேச அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி மிர்புரில் நடந்தது. இதில் போட்டியின் 4வது ஓவரை அறிமுக வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், 19, வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒரு ரன் எடுக்க ஓடினார்.
அப்போது ரஹ்மான் குறுக்கே வர, இருவரும் மோதினர். அப்போது ரஹ்மானை பார்த்து ரோகித் சர்மா விரலை நீட்டி எச்சரித்தார். பின் நடுவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்த, ரஹ்மான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
பின் 23 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டும் எடுத்து இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இந்நேரத்தில் கேப்டன் தோனி களமிறங்கினார்.
இதனிடையே 25வது ஓவரை ரஹ்மான் வீசினார். இதன் 2வது பந்தில் தோனி ரன் எடுக்க ஓடினார். அப்போது மீண்டும் குறுக்கே புகுந்தார் ரஹ்மான்.
இதை முன்னதாக கவனித்து விட்ட தோனி விலகி ஓட முயற்சிக்கவில்லை. தவறு ரஹ்மான் பக்கம் தான் என்றாலும் வேகமாக வந்த தோனி தனது இடது தோள்பட்டையால் ரஹ்மானை இடித்து தள்ளினார்.
இதில் லேசான காயமடைந்த ரஹ்மான், களத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இதுகுறித்து அம்பயரிடம் புகார் செய்தார் தோனி
போட்டியில் தோற்கப் போகிறோம் என்ற நெருக்கடியா, இல்லை வேறு ஏதாவது காரணமா எனத் தெரியவில்லை. ‘மிஸ்டர் கூல்’ என்றழைக்கப்படும் கேப்டன் தோனி, களத்தில் இப்படி மோசமாக நடந்தது கொண்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.இவ்விவகாரத்தில் தோனியை எச்சரிக்க வேண்டும் என, வங்கதேச வீரர்கள் அம்பயரிடம் முறையிட்ட போதும், அதை கண்டு கொள்ளவில்லை.
இந்த ‘டென்ஷனில்’ கவனத்தை சிதறவிட்ட தோனி, அடுத்த ஓவரில் அவுட்டாக, அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
ஒருவேளை அறிமுக வீரர் ரஹ்மான் தவறு செய்திருந்தாலும், ‘ஜாம்பவான்’ தோனி விலகிச் சென்றிருக்க வேண்டாமா. விளையாட்டு உணர்வுக்கு எதிராக இப்படி நடந்து கொண்டது இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இருப்பினும் சம்பவம் குறித்து விளக்கம் தர வேண்டும் என, கேப்டன் தோனி, இயக்குனர் ரவி சாஸ்திரி, மானேஜர் பிஸ்வரப் தேவுக்கு, ‘மேட்ச் ரெப்ரி’ ஆன்டி பைகிராப்ட், சம்மன் அனுப்பினார். இதேபோல ரஹ்மானுக்கும் தரப்பட்டது.
இன்று காலை ஆன்டி பைகிராப்ட், களத்தில் இருந்த அம்பயர்கள் ராடு டக்கர், எனாமுல் ஹக் மற்றும் கேப்டன் தோனி உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது இந்திய தரப்பில், ‘தோனி இதை வேண்டுமென்றே செய்யவில்லை, முழங்கையால் ரஹ்மானை இடிக்க முயற்சிக்கவில்லை என்பதால் ‘லெவல் 1’ விதிக்கு கூட பொருந்தாது,’ எனவும் வாதிடப்பட்டது.
ஆனால், ‘மேட்ச் ரெப்ரி’ ஆன்டி பைகிராப்ட், தோனியின் செயல் ‘லெவல்–2’ ம் விதி சம்பந்தப்பட்டது என்றார். இதற்காக 50 முதல் 100 சதவீத அபராதம் அல்லது 2 போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் தோனியின் சம்பளத்தில் 75 சதவீதம் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
இதன் பின் ரஹ்மான், வங்கதேச அணி மானேஜர் காலேத் மகமூது அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். முடிவில், ரஹ்மானுக்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.