எலி - விமர்சனம்
இனி கதாநாயகராகவே மட்டுமே நடிப்பது என உறுதியில் இருக்கும் காமெடி நாயகர் வடிவேலு, தெனாலிராமன் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளனுடன் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் 'எலி'.எலி வெறும் சிரிப்பு எலியா.? செயற்கரிய காரியங்கள் செய்யும் புலியா.? என பார்ப்போம்!
1960ம் ஆண்டுகளில் நடக்கிறது எலி படத்தின் கதை. வடிவேலு, போலீஸில் கான்ஸ்டபிள் ஆக வேண்டும் எனும் ஆசையில் இருந்தாலும், ஒரு இன்ச் மார்பளவு குறைவாக இருந்த காரணத்தால் பலே திருடனாகிவிடுகிறார். ஆனாலும், அவர் விரும்பிய போலீஸ் வேலை, போலீஸ் உயரதிகாரிகள் மூலம் வேறு ரூபத்தில் அவருக்கு கிடைக்கிறது. பெரும்புள்ளி போர்வையில், 1960களில் தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை கடத்தும் பெரும் புள்ளியையும், அவரது கும்பலையும் வேவு பார்க்கும் உளவு போலீஸாகிறார் வடிவேலு.
கொலைபாதக கும்பலின் கைகளில் சிக்காமல் அந்த கும்பலில் வேவு பார்த்து, போலீசில் போட்டு கொடுத்து தான் விரும்பிய போலீஸ் வேலையை வடிவேலு சட்டப்படி அடைந்தாரா.? அல்லது சட்டத்தை டபாய்க்கும் அந்த சிகரெட் கடத்தல் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமானாரா.? என்பது தான் எலி படத்தின் காமெடியும், நவீன காலத்துக்கும் பொருந்தும் கரு தாகமிக்க வசனங்களை உடைய எலி படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதி கதை! வடிவேலு, எலி எனும் எலிச்சாமியாக தன் பாத்திரத்தை பக்காவாக செய்திருக்கிறார். போலீசுக்கு போட்டு கொடுக்கும் ஜாலி பாத்திரத்திலும் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார்.
இன்டர்வெல் வரை திரையில் காணாத கதாநாயகி சதா, இன்டர்வெல்லுக்கு பின் ரசிகர்களை சதா சதா என கூக்குரலிட வைக்கிறார். சிகரெட் கடத்தல் வில்லன் பிரதீப் ராவத், தன் பார்வையால் உருட்டி மிரட்டுகிறார். போலீஸ் அதிகாரி ஆதித்யா, படகுபாபு - மகாநதி சங்கர், குரங்கு குமார் - மொட்டை ராஜேந்திரன், ஜெயிலர் சந்தானபாரதி, ராஜ்கபூர், சண்முகராஜன், முத்துக்காளை, உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். ஆனாலும், படம் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நாடகத்தன்மையுடன் நகருவதால், முன்பாதியில் ஒருக்கட்டத்திற்கு மேல் ரசிகர்கள் உஷ்... அப்பா, அம்மா... என பெருமூச்சு விடுவது தியேட்டரின் டிடிஎஸ்., டால்பி சவுண்ட்களையும் தாண்டி கேட்கிறது. ஆனாலும் அந்த குறையை பின்பாதி மறக்கடிக்க செய்து நிவர்த்தி செய்திருப்பது ஆறுதல்!
வித்யாசாகரின் இசையில், ஜெயில் தத்துவ பாடல் உள்ளிட்ட பாடல்கள் 1960 ரக சுக ராகங்கள். பால் லிவிங்கஸ்டனின் சீரியஸ் ஔிப்பதிவு பலே சொல்ல வைக்கிறது. விடி.விஜயன், பிஎஸ்.ஜாயின் கத்தரி இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம். தோட்டா தரணியின் கலை பலே சொல்லும் அளவிற்கு இருக்கிறது.
மொத்தத்தில், யுவராஜ் தயாளனின் எழுத்து இயக்கத்தில், வடிவேலு 1960 கதாநாயகராக எலி படத்தில் ஜொலிக்கிறார். ரசிகர்கள் சற்றே நௌிகிறார்கள்!