டிராவை நோக்கி முதல் டெஸ்ட்
இந்தியா–வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்து இருந்தது. இதைதொடர்ந்து நேற்றைய 3 வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 462 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஷிகர் தவான்(173), முரளி விஜய் (150) ஆகியோர் அசத்தினர்.
இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் 2 நாட்கள் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதால், வங்காளதேச அணிக்கு நீண்ட நேரம் கொடுத்து விரைவில் ஆல் அவுட் செய்யும் நோக்கில் இந்திய அணி கேப்டன் கோலி நேற்றைய 462 ரன்கள் என்ற ஸ்கோரோடு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 27 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அடித்து ஆடிய தமிம் இக்பால் 19 ரன்களில் அஷ்வின் பந்தில் நடையை கட்டினார். 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை எடுத்து வங்காளதேச அணி ஆடிக்கொண்டிருந்த போது, மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால், 4 வது நாள் ஆட்டமும் மழையால் சீக்கிரமாகவே முடித்துக்கொள்ள்ப்பட்டது.