'வாட்ஸ் ஆப்' வாய்ஸ் காலிங் வசதி; இப்போது வி்ண்டோஸ் மொபைல்களுக்கும் அறிமுகம்
இண்டர்நெட் மூலம் வாய்ஸ் காலிங் வசதியை ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 ஆகிய இயங்குதளங்களுக்கு வழங்கி வந்த 'வாட்ஸ் ஆப்' நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போது விண்டோஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.'வாட்ஸ் ஆப்' வழங்கும் வாய்ஸ் காலிங் வசதியில் வழக்கமாக போன் கால்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஏதும் கிடையாது. ஆனால், அதற்கு பதிலாக இண்டர்நெட் டேட்டாவுக்கு ஏற்ற கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த வாய்ஸ் காலிங் வசதி மூலம் வாட்ஸ் ஆப்பில் உள்ளவர்களிடம் மட்டுமே கால் செய்ய முடியும்.
இந்த வாய்ஸ் காலிங் வசதியை பெற விண்டோஸ் போனை பயன்படுத்தி வருபவர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். அப்பேட்டட் வெர்ஷன் மூலம் ஆடியோ பைல்களையும் அனுப்பலாம். குறிப்பாக, விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு மேல் உள்ள விண்டோஸ் மொபைல் பதிப்புகளில் எளிதாக பெறலாம்.
கடந்த மார்ச் மாதம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வாய்ஸ் காலிங் வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப், அதற்கு அடுத்த மாதங்களில் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கியது. இதையடுத்து, நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு விண்டோஸ் போன்களுக்கும் இந்த வசதியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.