"காக்கா முட்டை - விமர்சனம்"






                                                                இரண்டு தேசிய விருதுகள் பெற்ற திரைப்படம், நடிகர் தனுஷின் தயாரிப்பில், நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கம் படம், ஐஸ்வர்யா ராஜேஷ், 2 வளர்ந்த குழந்தைகளுக்கு தாயாக, குப்பத்து பெண்ணாக கண்ணீரும் கம்பளையுமாக வாழ்ந்திருக்கும் படம்... என அடுக்கி கொண்டே போகலாம் காக்கா முட்டை பற்றி..! குப்பத்து சிறுவர்கள் இருவரது பீட்சா திண்ணும் ஆசை பிரச்னை ஆவதும், அது அரசியல் ஆக்கப்படுவதும் தான் காக்கா முட்டை படத்தின் கரு, கதை, களம், எல்லாம்!                                                                                                        
                                                                 சென்னை, கூவம் ஆற்றங்கரையோரம் வாழும் ஐஸ்வர்யாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஏதோ சிறிய குற்றம் ஒன்றிற்காக சிறை சென்ற கணவனை ஜாமினில் எடுக்க பணத்திற்கு படாதபாடுபடும் ஐஸ்வர்யா, உடன் வயதான மாமியாரையும் வைத்து கொண்டு பாத்திர கம்பெனியில் வேலை பார்த்தபடி, வரும் வருமானத்தில் வயிற்றை கழுவவே கஷ்டப்படுகிறார். அதனால் பிள்ளைகளை படிக்க வைக்க வழியில்லாமல் அவர்களை ரயில்வே தண்டவாளத்தில் கூட்ஸ் வண்டிகளில் இருந்து விழும் கரியை பொறுக்க விடுகிறார்.                                                                                                                                                                                  
                                                                 கரி விற்று வரும் காசில் குடும்பத்தை நடத்தியபடி கணவனை மீட்க போராடும் ஐஸ்வர்யாவை புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளும் வயதிலும் இல்லாத சிறுவர்கள் இருவரும், ஏரியாவில் நடிகர் சிம்பு வந்து தொடங்கி வைக்கும் பீட்சா கடையில் பீட்சா திண்பதற்கு ஆசைப்படுகின்றனர். அந்த சிறுவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் பீட்சா ஆசை பேராசையாக தெரிகிறது. அது நிராசை ஆனதா.?, தடை பல கடந்து நிறைவேறும் ஆசை ஆனதா.? என்பது தான் காக்கா முட்டை படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை! இந்த கதையினுள் அழுக்கு உடையும், அசால்ட்டான முகமும் உடைய ஏழை எளிய சிறுவர்கள், பீட்சா கடைகளுக்குள் நுழையக்கூட முடியாது என்கிற யதார்த்தத்தையும், அதிலும் இறுதியில் ஜெயிப்பது முதலாளிகளும், அவர்களது பண பலமும், படை பலமும் தான் எனும் உண்மையையும் சொல்லி, முதலாளிகளின் பணம் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் போய் சேரும், பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு ஒரு போதும் வந்து சேராது... எனும் நிஜத்தையும் நெஞ்சுறுதியுடன் சொல்லியிருக்கும் காக்கா முட்டையின் இயக்குநர் நிச்சயம் கவனிக்கப்பட்டு, பாராட்டுகளும், இன்னும் பல பரிசுகளும் பெற வேண்டியவர்!

                                                                 கூவம் சாக்கடை அல்ல... எங்கள் வாழ்க்கையுடன் கலந்தோடும் நதி... என குப்பத்து மக்கள் வாழ்ந்து வரும் வாழ்க்கையையும், அந்த வாழ்க்கைக்குள் கிடைத்த வரை லாபம்... என கொள்ளை அடிக்கும் சிலரின் போலி தனத்தையும் அழகாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.மணிகண்டனுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!                                                                                                
                                                                   சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் இருவரும் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையாக நடிக்கவில்லை, குப்பத்து சிறுவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்! அதிலும் இந்த சகோதரர்களுக்கு சின்ன, பெரிய காக்கா முட்டை பெயர் அமையும் காரணம் பிரமாதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழ்மையால், திருட்டுத்தனமாக, தந்திரமாக காக்கா முட்டையை உடைத்து குடித்துவிட்டு, கரி மூட்டையை தூக்கி கொண்டு அவர்கள் செய்யும் சேட்டைகள் சிரிப்பு சீனி பட்டாசுகள். ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக வாழ்ந்திருக்கிறார். அம்மணிக்குள் இத்தனை பெரிய நடிகை இத்தனை நாள் எப்படி ஔிந்து கொண்டிருந்தார்.? என்பது ஆச்சர்யமான கேள்வி்!                                                                                                                                              

                                                                   பீட்சா கடை முதலாளி பாபி ஆண்டனி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, லோக்கல் ஜேப்படி பேர்வழிகளான ரமேஷ் திலக், யோகி பாபு, ரயில்வே கலாசி பழரசம் - ஜோ மல்லூரி உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டிருக்கின்றனர்.பீட்சா கடை திறக்க நடிகராகவே கெஸ்ட் ரோலில் வரும் எஸ்டிஆர் - சிம்புவும் பெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்!  (தனுஷ் தயாரித்த படத்தில் சிம்பு எப்படி.?)                                                        
                                                                   ஜி.வி.பிரகாஷ் குமரின் இசை பிரகாசம், இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் எம்.மணிகண்டனின் ஔிப்பதிவு மற்றும் இயக்கத்தில், பீட்சாவுக்காக அலையும் சிறுவர்கள் இருவரும், வசதியான வீட்டு பிள்ளை தரும் எச்சில் பீட்சாவை திண்ணாது யெஸ் ஆகும் எழையின் சுயகவுரவ காட்சி, அப்பாவே வேணாம், பீட்சா தான் வேண்டும் என அம்மாவிடம் அடம்பிடிக்கும் சிறுவர்களின் பிடிவாதம், தெருநாய் குட்டியை ரூ.25 ஆயிரம் விலை பேசும் அறியாமை, க்ளைமாக்ஸில் பீட்சா கடை முதலாளி சிறுவர்கள் இருவரையும் கைகூப்பி வணங்கி கடைக்குள் அழைத்து சென்று பீட்சா சாப்பிட வைத்து, பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லாவகம்.... உள்ளிட்ட ஒவ்வொரு காட்சிகளிலும் காக்கா முட்டை - கலர்புல் முட்டையாக ஜொலிக்கிறது.
                                                                     மொத்தத்தில், கலைப்படம் என்றாலும், கமர்ஷியல் படமாகவும் ஜொலிக்கும் காக்கா முட்டை - நிச்சயம் வசூலிலும் பெரிய மூட்டை கட்டும்!


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad