ஐதராபாத் சென்றது பத்து எண்றதுக்குள்ள யூனிட்!
கோலிசோடா படத்தை அடுத்து விஜய் மில்டன் இயக்கி வரும் படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விக்ரம்-சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். அதோடு இப்படத்தில் மாஸ் ஹீரோ கதையில் நடித்துள்ள விக்ரமுக்கு பில்டப் பாடலும் உள்ளது. இதனால் இதுவரை பார்த்து வந்த விக்ரமில் இருந்து இந்த படத்தில் மாறுபட்ட விக்ரமை பார்க்கலாம் என்கிறார்கள். மேலும். இந்த படத்தின் கதை ஹைவேயில் நடப்பது போல் உள்ளதால், பெரும்பாலான வசன காட்சிகள் மட்டுமின்றி சண்டை காட்சிகளையும் ஹைவேயிலேயே படமாக்கியுள்ளனர்.
முக்கியமாக படத்தின் க்ளைமாக்ஸ் நேபாளத்தில் முடிவடைவதால் அந்த நாட்டுக்கே சென்று படமாக்கி வந்தனர்.ஆனால் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கு முன்பாக அவர்கள் சென்னை திரும்பியிருந்த நேரம் நேபாளத்தில நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த சேதி பத்து எண்றதுக்குள்ள யூனிட்டை குலைநடுங்க வைத்தது. ஏனென்றால் அவர்கள் நேபாளத்தில் படப்பிடிப்பு நடத்தி விட்டு திரும்பியிருந்த பகுதி அந்த நிலநடுக்கத்தினால் முற்றிலுமே தரைமட்டமாகி விட்டதாம்.
விளைவு, இறுதிகட்ட படப்பிடிப்பை நேபாளத்தில் நடத்தாமல் வேறு லொகேசனுக்கு மாற்றியுள்ள விஜய் மில்டன், நேற்று ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். சிலநாட்கள் மட்டுமே அங்கே நடத்தி விட்டு, மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே படமாக்கப்போகிறாராம். ஆக, இன்னும் ஓரிரு வாரத்தில் பத்து எண்றதுக்குள்ள படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள்.