கோபா அமெரிக்கா கால்பந்து தொடக்க ஆட்டத்தில் சிலி அணி வெற்றி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சிலி அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணியை வீழ்த்தியது.உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா போட்டியாகும். தென்அமெரிக்க கண்டத்தின் ஜாம்பவான் யார் என்பதை நிர்ணயிக்கும் 44–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
இந்த கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் சிலி, மெக்சிகோ, ஈகுவடார், பொலிவியா, ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் உருகுவே, பராகுவே, ஜமைக்கா, ‘சி’ பிரிவில் பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும், இரண்டு சிறந்த மூன்றாவது இடத்தை பெறும் அணிகளும் என்று மொத்தம் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள சிலி அணி, ஈகுவடாரை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய சிலி அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தில் எந்தவித கோலும் விழவில்லை.
ஆட்டத்தின் 66–வது நிமிடத்தில் சிலி வீரர் அர்டுரோ விடல் கோல் எல்லை பகுதியில் பந்தை கடத்தி செல்ல முயன்ற போது ஈகுவடார் வீரர் மில்லர் போலானோஸ் விதிமுறைக்கு மாறாக தள்ளினார். இதனால் சிலி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அர்டுரோ விடல் அபாரமாக கோல் அடித்தார்.83–வது நிமிடத்தில் சிலி அணி 2–வது கோலை போட்டது. இதனை அந்த அணி வீரர் எடுயர்டோ வார்கேஸ் அடித்தார். கடைசி நிமிடத்தில் சிலி அணியின் மாற்று ஆட்டக்காரர் பெர்னாண்டஸ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
கடைசி வரை ஈகுவடார் அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் சிலி அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.