'எலி' படத்தை தவறாக விமர்சிப்பதா? - வடிவேலு ஆவேசம்!
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் வடிவேலு நடிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'எலி'. இப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானதால், வடிவேலு கொதிப்படைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்," 'எலி' படத்தை அமோக வெற்றிப் பெற செய்த என்னுடைய ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய படங்களில் காமெடி செய்து உங்களை ரசிக்க, சிரிக்க வைத்திருக்கிறேன். சின்ன இடைவெளி விழுந்தவுடன் "ஏன்பா நடித்தா தான் என்ன?"என்று எல்லோரும் கேட்பார்கள். என்னுடைய காமெடியை நீங்கள் எந்தளவுக்கு ரசித்திருக்கிறீர்கள் என்பதை இந்த 'எலி' படத்தைப் பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன்.
நிறைய திரையரங்குகளில் மறைமுகமாக சென்று பார்த்தேன். மக்கள் ரசிப்பதைப் பார்த்து கண்கலங்கி அழுதுவிட்டேன். நிறைய பொருட்செலவில் இப்படத்தை தயாரிப்பாளர் சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். என்னுடைய காமெடியை ரசிக்கிற கூட்டத்தில் இருந்து வந்தவர் தான் தயாரிப்பாளர். அனைவருமே கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தை எடுத்ததிற்கு பலன் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு வரும் நிறைய விமர்சனங்கள் உண்மையாக இருக்கிறது. சிலர் இந்தப் படத்தைப் பற்றி தீய எண்ணத்தில் தப்பு தப்பாக எழுதுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த படம் மட்டுமல்ல எந்த படத்தையும் பார்க்காமல் விமர்சனம் எழுதாதீர்கள். படம் பார்த்து நகைச்சுவை இல்லை என்றால், யாரிடமாவது நகைச்சுவை இருக்கா இல்லையா என்று கேட்டுவிட்டு எழுதுங்கள்.
நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் எல்லாம் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள். 'எலி' படத்தை கெடுப்பதற்கு சில விஷயங்கள் நடந்து வருகிறது. எல்லா படமுமே கஷ்டப்பட்டு போராட்டி எடுத்து தான் வெளியே வருகிறது. அதை கேவலமாக விமர்சனம் பண்ணுவதில் சின்ன சந்தோஷம் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். அந்த விமர்சனத்தை படித்து, சிலர் படத்தைப் பார்க்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு தூக்கம் வருகிறது பாவம்.
நகைச்சுவை நடிகனாக இருந்து அனைவரையும் இன்னும் சந்தோஷப்படுத்துவேன். கெட்ட விமர்சனத்துக்கு யாருமே தயவு செய்து தலைவணங்கி விடாதீர்கள். நிறைய பேர் சைக்கோவாக இருக்கிறார்கள். 'எலி' படத்தைப் பற்றி நிறையப் பேர் தப்பாக எழுதுகிறார்கள். நல்ல விமர்சனம் எழுதுபவர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.