தோல்விக்கு காரணம் தோனியா: கோஹ்லி கருத்தால் சர்ச்சை
‘‘வங்கதேசத்துக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் குழப்பமான மனநிலையுடன் விளையாடியது, ஆடுகளத்திலும் தெளிவற்ற முடிவு எடுக்கப்பட்டது போன்றவை தோல்விக்கு காரணமாக அமைந்தன,’’ என, விராத் கோஹ்லி கூறிய கருத்து இந்திய அணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசம் சென்ற இந்திய அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. விராத் கோஹ்லி தலைமையில் விளையாடிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது. ஆனால், தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி ஒருநாள் தொடரை 1–2 என இழந்தது. இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகக்கூட தயார் என தோனி தெரிவித்தார். அப்போது தோனிக்கு அஷ்வின், ரெய்னா ஆதரவு தெரிவித்தனர். மூன்றாவது ஒரு நாள் போட்டி துவங்கும் முன் விராத் கோஹ்லி கருத்து தெரிவித்தார். இதில் கேப்டன் தோனியை மறைமுகமாக தாக்கினார். இதனால் இந்திய அணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மூன்றாவது போட்டிக்கு முன் கோஹ்லி கூறியது: வங்கதேச அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இவர்கள் கோப்பை வெல்ல தகுதியானர்கள். உண்மையைக் கூற வேண்டுமானால் முதலிரண்டு போட்டியில் தெளிவற்ற மனநிலையுடன் விளையாடினோம். ஆடுகளத்திலும் முடிவு எடுப்பதில் குழப்பம் இருந்தது. இதை என்னிடம் கேள்வி கேட்பதால் மட்டும் கூறவில்லை. கிரிக்கெட் விமர்சகர்கள், போட்டியை பார்ப்பவர்களுக்கு கூட இந்திய வீரர்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தாதது தெரியும். ‘டிரஸிங் ரூமில்’ எவ்வித பிளவும் இல்லை. வீரர்களுக்கு இடையே முன்னதாக இருந்த நல்ல சூழ்நிலையே தற்போதும் உள்ளது.