சந்தன வீரப்பன் வில்லன், ராஜ்குமார் மகன் ஹீரோ- ராம்கோபால்வர்மாவின் அடுத்த சர்ச்சை ஆரம்பம்.
சர்ச்சைகளின் நாயகன் ராம்கோபால் வர்மா தன்னுடைய அடுத்த சர்ச்சைக்குத் தயாராகிவிட்டார். இந்த முறையும் வேட்டு சத்தத்துடன் படத்தை இயக்கவிருக்கிறார். அவர் இயக்கவிருக்கும் அடுத்தபடத்தின் பெயரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ் குமார் நடிப்பில் உருவாகிவரும் படம் கில்லிங் வீரப்பன். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் அதன் உண்மைச் சம்பவத்தையும் மையமாக வைத்து படமாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.
கன்னட உலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று 108 நாட்கள் சிறைவைத்து பின்னர் விடுவித்தார். அதனால் ராஜ்குமாரின் மகனான சிவ்ராஜ்குமார் வீரப்பனை படத்தில் பழிவாங்கவிருக்கிறாராம். அதாவது சிவ்ராஜ்குமார் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அப்படியானால் வீரப்பனாக நடிக்கவிருப்பது யார் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருக்கிறார் இயக்குநர்.
“ வீரப்பனின் கதையைப் படமாக்க வேண்டும் என்று முன்னரே விரும்பினேன். இப்போ தான் பக்காவா ஸ்க்ரிப்ட் தயாராகியிருக்கிறது. இந்த கதையின் உண்மையான நியாயத்தை நான் எடுத்துரைப்பேன். என்னுடைய கதை வீரப்பனை மையப்படுத்தி எடுக்கப்படபோவதில்லை. வீரப்பனை கொலை செய்த காவல்துறை அதிகாரியை மையப்படுத்தியது. அதற்காக தான் சிவ்ராஜ் குமாரை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைக்கவிருக்கிறேன். காரணம் நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பனை மகன் படத்தில் பழிவாங்கவிருக்கிறார்” என்று ராம்கோபால் வர்மா கூறினார்.