அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷ்ஷருக்கான வேறுபாடு என்ன?
இரண்டுமே தூண்டுதல் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவ முறைகளாகும். எப்போது குறிப்பிட்ட பாகத்தை தூண்டுதல் மூலம் கிளர்ச்சி அடையச் செய்கிறோமோ, அப்போது உடற்செயல்களுக்கான ரசாயனங்கள் சுரக்கப்பட்டு, அந்த உறுப்பு தொடர்பான பணிகள் சீரடைகின்றன. இதன் மூலம் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் சுழற்சியை துரிதப்படுத்தலாம். வலியையும் குறைக்கலாம். தசைகள் தளர்வடைந்து, உறுப்புகள் தூண்டப்படும்போது சிகிச்சை தொடங்கிவிடுகிறது.பாரம்பரிய சீன மருத்துவம், நமது உடலின் சக்தி, முக்கியமான 14 முடிச்சுகள் வழியே பாய்ந்தோடுவதாக குறிப்பிடுகிறது. அந்த முடிச்சுகளில் ஏற்படும் தடைகளை சரி செய்தாலே நோய்கள் குணமடையும் திறன் தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அக்குபிரஷ்ஷர் என்பது திபெத்தை பூர்வீகமாக கொண்ட மருத்துவ முறையாகும். இது அக்குபஞ்சர் மருத்துவத்திற்கும் பழமையானது.அக்குபிரஷ்ஷரை, 'ஊசியில்லா அக்குபஞ்சர்' என்று கூறுவது உண்டு.
அக்குபாயின்ட்ஸ் எனப்படும் குறிப்பிட்ட உடல் முடிச்சுகளை, தடவுதல், அழுத்துதல் முறையில் தூண்டிவிட்டு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரல்கள், முழங்கை, கால்விரல்கள் மூலம் குறிப்பிட்ட உடல் முடிச்சுகள் தூண்டப்படும்.
அக்குபிரஷ்ஷர் சிகிச்சை செய்து கொள்பவர்கள், உடல் புத்துணர்ச்சி பெற்றதாக உணர்வதுடன், அவர் களது நோய் எதிர்ப்பு மண்டலமும் கிளர்ச்சி அடைந்திருப்பதை அனுபவப்பூர்வமாக அறிவார்கள். அக்குபிர ஷ்ஷர் சிகிச்சை, அக்குபஞ்சரை ஒருங்கிணைத்த சிகிச்சை முறையாகும்.
அக்குபஞ்சர் முறையில் மெல்லிய, நீளமான, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகள் மூலமாக உடலின் ஆற்றல் முடிச்சுகள் தூண்டப்படும். ஊசிகள் அனுபவம் பெற்ற மருத்துவர் மூலமாகவோ அல்லது மின்அழுத்த முறையிலோ உடலில் குறிப்பிட்ட ஆழம் வரை செலுத்தப்படும். தேர்ந்த மருத்துவ நிபுணரால் செலுத்தப்படும் அக்குபஞ்சர் ஊசியானது வலியை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.