கோபா அமெரிக்கா கால்பந்து: சிலி-மெக்சிகோ ஆட்டம் ‘டிரா’
44-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 நாடுகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும், சிறந்த இரண்டு மூன்றாவது இட அணிகளும் கால்இறுதிக்குள் நுழையும்.
இந்த போட்டியில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் சிலி-மெக்சிகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் தொடக்கம் முதலே ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருந்தது.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி வீரர் விசென்ட் உசோ முதல் கோலை அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே (22-வது) சிலி அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் அர்டுரோ விடால் தலையால் முட்டி இந்த கோலை போட்டார். 29-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி முன்னிலை பெற்றது. அந்த அணியின் ரால் ஜிம்மென்ஸ் தலையால் முட்டி அபாரமாக இந்த கோலை அடித்தார். 42-வது நிமிடத்தில் சிலி அணி 2-வது பதில் கோலை திருப்பியது. எட்வர்டோ வார்கஸ் தலையால் முட்டி இந்த கோலை போட்டார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
இதையடுத்து பிற்பாதியில் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. 55-வது நிமிடத்தில் சிலி அணி 3-வது கோலை போட்டது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் அர்டுரோ விடால் மீண்டும் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை.
66-வது நிமிடத்தில் மெக்சிகோவின் விசென்ட் உசோ கோல் போட்டு பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதேபிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பொலிவியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தர வரிசையில் முன்னிலையில் இருக்கும் ஈகுவடார் அணிக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை ருசித்தது. கோபா அமெரிக்கா போட்டியில் பொலிவியா அணி 1997-ம் ஆண்டுக்கு பிறகு பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.