ஸ்ரீதேவியின் அர்ப்பணிப்பு-புலி
இந்த படத்தில் ஸ்ரீதேவியின் ஒத்துழைப்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷமீம் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். இந்த படத்திற்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஸ்ரீதேவி பொறுமையாக மேக்கப் போட்டுக்கொண்டதாக கூறிய அவர், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது வெயில் மிகக்கடுமையாக இருந்ததாகவும், ஆனால் அதை பொருட்படுத்தாமல் சுமார் 10 முதல் 15 கிலோ எடையுள்ள உடைகள் மற்றும் நகைகள் அணிந்து ஸ்ரீதேவி எவ்வித சலிப்பும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்து கொடுத்ததாகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.
மேலும் ஸ்ரீதேவிக்கு இந்த படத்தில் வாள்சண்டை உள்பட ஆக்சன் காட்சிகளும் இருப்பதாக கூறிய ஷமீம், பிரபல காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்ஹோத்ராவை ஸ்ரீதேவிக்காகவே பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் வெளியான 'கிளாடியேட்டர்' திரைப்படத்திற்கு இணையாக தமிழில் இந்த படம் முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டிப்பாக இந்த படம் விஜய்க்கு மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.