இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மருத்துவ பொது கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்க 2,655 இடங்கள் இருக்கின்றன. அரசு பல் மருத்துவ படிப்பில் சேர 100 இடங்கள் உள்ளன.மருத்துவபடிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளில் தகுதியான 31 ஆயிரத்து 525 பேர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களில் 4 ஆயிரத்து 679 பேர் பழைய மாணவர்கள்.இவர்களில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நேற்று சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
முன்னாள் ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடு 5 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஒரு பி.டி.எஸ். இடம் ஆகும். இந்த 6 இடங்களுக்கு 54 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு கலந்தாய்வு முதலில் நடந்தது.பின்னர் விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதல் இடத்தை பிடித்த அஸ்வினி என்ற மாணவி கோவை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தார். 2-வது இடம் பிடித்த கேஸ்மா என்ற மாணவி தேனி மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்தார். 3-வது இடத்தை பிடித்த மீனுப்பிரியாவுக்கு வேலூர் மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கொடுக்கப்பட்டது.
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனம் 70 சதவீதம்வரை இருக்கலாம். ஆனால் கைகள் திடமாக இருக்கவேண்டும். இவர்களுக்கு 68 இடங்கள் உண்டு. இதற்கு 83 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். சில மாணவர்கள் நடக்க சிரமப்பட்டு வந்தனர். சிலர் கை சரிஇல்லாததால் அதற்கான ஊன்றுகோலை பயன்படுத்தியபடி வந்தனர்.அவர்களுக்கு ஊனம் எவ்வளவு இருக்கிறது என்றறிய மருத்துவ குழுவினர் பார்வையிட்டனர். இதன் மூலம் 65 பேர்கள்தான் கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். ஆனால் 68 இடங்கள் இருந்தன. 65 மாணவ-மாணவிகளும் தங்களுக்கு உரிய கல்லூரியை தேர்ந்து எடுத்தனர். 3 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்கள் இன்று நடக்கும் பொது கலந்தாய்வுக்குரிய மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
நேற்று மாணவ-மாணவிகள் கல்லூரியை தேர்ந்து எடுத்தாலும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை.ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுவதற்கு முன்பாக உங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்று மருத்துவ கலந்தாய்வு நடந்த இடத்தில் அறிவிக்கப்பட்டது.
இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மருத்துவ பொது கலந்தாய்வு தொடங்குகிறது. காலை 9 மணி, 11 மணி, 2 மணி ஆகிய கட்டங்களில் நடக்கிறது. இன்று தொடங்கி 25-ந்தேதி வரை முதல் கட்டமாக நடக்கிறது. அடுத்து 2-வது கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.