பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி: ஆண்டுக்கு ரூ. 7 கோடி சம்பளம்
உலகில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி. இவருக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி வரை சம்பளம் பேசப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடர்ச்சியான தோல்விகளை அடுத்து இந்திய அணியின் ‘இயக்குனர்’ பதவியில் நியமிக்கப்பட்டார் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி. இதனால் பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்படுகிறார் என்று பேசப்பட்டன. இதனிடையே உலக கோப்பை தொடருக்குப் பின் ஒப்பந்தம் முடிந்த பிளட்சர், நாடு திரும்பினார்.
புதிய பயிற்சியாளர் தேடல் நடந்து வந்தன. ரவி சாஸ்திரியும் இதை விரும்பாத நிலையில், இப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கங்குலி அல்லது டிராவிட் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது .
இந்நிலையில், கங்குலி, சச்சின், லட்சுமணை இணைந்து புதிய ஆலோசனைக்குழு உருவாக்கப்பட்டது. 19 வயதுக்குட்பட்ட அணிக்கு டிராவிட் பயிற்சியாளர் ஆனார். இருப்பினும். வங்கதேச தொடரில் ரவி சாஸ்திரி இயக்குனர் அந்தஸ்தில் தொடர்வார் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது இவரை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளதாம். பிளட்சருக்கு ஆண்டுக்கு ரூ. 4.2 கோடி வரை சம்பளம் தரப்பட்டது. ஆனால், ரவி சாஸ்திரிக்கு ரூ. 7 கோடி வரை தர பேச்சுவார்த்தை நடக்கின்றன. வங்கதேச தொடர் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அப்போது, உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் கிரிக்கெட் பயிற்சியாளர் என்ற பெயரை ரவி சாஸ்திரி தட்டிச்செல்வார்.