சென்னை அணியின் மதிப்பு ரூ.5 லட்சம் தானா ?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு ரூ.5 லட்சம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அமலாக்க துறை விசாரிக்க உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் என்ற தனி நிறுவனத்தை உருவாக்கி, அந்நிறுவனத்துக்கு சிஎஸ்கே அணியை விற்றார். இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறைப்படி, ஒரு ஐபிஎல் அணியை விற்கும் போது, அதன் மொத்த விலையில் 5 சதவீதத்தை பிசிசிஐக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத் தொகையை குறைப்பதற்காக சென்னை அணியின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதனை முந்தைய ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு ஏற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவின் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது, சென்னை அணியின் மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு தனியார் அமெரிக்க நிறுவனம் நடத்திய கணிப்புபடி, சென்னை அணியின் மதிப்பு ரூ.450 கோடி என கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் பிசிசிஐக்கு ரூ.22 கோடிக்கும் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக அமலாக்க துறை விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.