இந்தியா 4வது இடம்: டெஸ்ட் ரேங்கிங்கில் பின்னடைவு
ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 4வது இடத்துக்கு பின்தங்கியது.வங்கதேசம் சென்ற இந்திய அணி, ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இப்போட்டி துவங்குவதற்கு முன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்ட டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 99 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தது. இந்த இடத்தை தக்கவைக்க வங்கதேச அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட பதுல்லா டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்ததால் இந்திய அணி 97 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுடன் போட்டியிட்டது. இதில் தசம புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்த இந்தியா (97.47 புள்ளி) 4வது இடம் பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களை முறையே இங்கிலாந்து (97.33 புள்ளி, 5வது இடம்), பாகிஸ்தான் (96.75, 6வது இடம்) அணிகள் கைப்பற்றின. 7, 8வது இடங்களில் இலங்கை (96 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (84) அணிகள் உள்ளன.
நியூசிலாந்து அணி (99 புள்ளி) 3வது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களில் முறையே தென் ஆப்ரிக்கா (130 புள்ளி), ஆஸ்திரேலிய (108) அணிகள் உள்ளன. வங்கதேச அணி(41 புள்ளி) 9வது இடத்தில் நீடிக்கிறது. பத்தாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி (5 புள்ளி) உள்ளது.