வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 3,280 கோடி ரூபாய் வசூல் செய்து ஜுராசிக் வேர்ல்டு சாதனை
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் வகை விலங்குகள் குறித்து வெளியான ஹாலிவுட் திரைப்படம் ஜுராசிக் பார்க். இந்த படம் உலகமெங்கும் கடந்த 1993ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்த படம் 3 அகாடமி விருதுகள் உட்பட 20 விருதுகளை வென்றது. அதன்பின்பு அடுத்தடுத்து பாகம் 2 (தி லாஸ்ட் வேர்ல்டு) மற்றும் பாகம் 3 (ஜுராசிக் பார்க் 3) என படங்கள் வெளியாகின.
இந்நிலையில், 4வது பார்ட்டாக ஜுராசிக் வேர்ல்டு என்ற பெயரில் டைனோசர்கள் பற்றிய படம் உலகம் முழுவதும் கடந்த 12ம் தேதி உலகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி வெளியானது
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் ஆரம்ப காட்சியில் ஓவன் (கிறிஸ் பிராட்) 3 வெலோசிராப்டர் வகை டைனோசர்களை பழக்கப்படுத்துவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 3 டைனோசர்களில் நடுவில் உள்ள டைனோசரின் முதுகு பகுதியில் நீல நிற கோடுகள் இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற புதிய வடிவமைப்புகளுடன் காட்சிகள் மெருகேற்றப்பட்டு உள்ளன.
இந்தப் படத்தில் ஜூராசிக் பார்க் உரிமையாளராக சைமன் மஸ்ரானி என்ற கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் இர்பான் கான் நடித்துள்ளார். கோடீசுவரரான சைமன் மஸ்ரானி 1998ம் ஆண்டில் ஜான் ஹேமண்டினின் இன்ஜென் என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறார். அதனையடுத்து டாக்டர் ஹென்றி வூ என்பவரை தலைமை விஞ்ஞானியாக நியமிக்கிறார். டைனோசர்களை வளர்க்கும் இந்த தீம் பார்க் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ஜுராசிக் வேர்ல்ட்.உலகம் முழுவதும் கடந்த 12ம் தேதி ரிலீசான இப்படம் நான்கே நாட்களில் 511 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு சுமார் 3,280 கோடி ரூபாய் ஆகும்.இதன்மூலம், ‘ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹால்லோஸ் பாகம்-2' படத்தின் சாதனையை ஜூராசிக் வேர்ல்ட் தகர்த்தெறிந்துள்ளது.
சீனாவில் மட்டும் 100 மில்லியன் ( சுமார் ரூ. 600 கோடி) வசூல் செய்துள்ளது. இது தவிர 66 நாடுகளில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என இப்படம் அறிவிக்கப் பட்டுள்ளது.அமெரிக்க ரசிகர்களை பொருத்தவரை சுமார் 48 சதவீதம் பேர் ‘ஜுராசிக் வேர்ல்ட்' திரைப்படத்தின் ‘3-டி' பதிப்பை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்துள்ளதாக ஹாலிவுட் சினிமா பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
ஜூராசிக் வேர்ல்ட் படம் வெளியான நான்கே நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இர்பான்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்தப் புதிய படத்தின் வெற்றி எங்களுக்கு கிடைத்த ஓர் ஆசிர்வாதம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு நெகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
மொத்த வசூல் சாதனையில் தற்போதுவரை முதல் இடத்தில் இருக்கும் ‘அவதார்' படத்தின் அசுர சாதனையை இந்த ‘டைனோசர்' முறியடிக்கும் என கூறப்படுகிறது.