நார்வே செஸ்: ஆனந்த் 2வது இடம்
நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2வது இடம் பிடித்தார். பல்கேரியாவின் வாசலின் டோபலோவ் சாம்பியன் பட்டம் வென்றார். நார்வேயில் உள்ள ஸ்டாவன்கர் நகரில் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். எட்டு சுற்றின் முடிவில் 3 வெற்றி, 5 ‘டிரா’ உட்பட 5.5 புள்ளிகளுடன் ஆனந்த் 2வது இடத்தில் இருந்தார்.
ஒன்பதாவது மற்றும் கடைசி சுற்றில் இந்தியாவின் ஆனந்த், பல்கேரியாவின் வாசலின் டோபலோவ் மோதினர். இதில் வெற்றி பெற்றால் பட்டம் வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கிய ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 18வது நகர்த்தலின் போது ‘டிரா’ ஆனது.
ஒன்பது சுற்றின் முடிவில், 3 வெற்றி, 6 ‘டிரா’ உட்பட 6 புள்ளிகள் பெற்ற ஆனந்த் 2வது இடம் பிடித்தார். ஐந்து வெற்றி, ஒரு தோல்வி, மூன்று ‘டிரா’ உட்பட 6.5 புள்ளிகள் பெற்ற பல்கேரியாவின் வாசலின் டோபலோவ் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நார்வேயின் ஹம்மருக்கு எதிரான கடைசி சுற்றில் தோல்வி அடைந்த ‘உலக சாம்பியன்’ கார்ல்சன் 3.5 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார்.