பிஎட் படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும்
2015-16-ம் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் பிஎட் படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அறிவித்துள்ளது. என்சிடிஇ-யின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு தனியார் கல்வியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் பிஎட் படிப்பு இந்த ஆண்டு ஏற்கெனவே இருந்து வருவதைப் போன்று ஓராண்டு காலமாக இருக்குமா? அல்லது என்சிடிஇ அறிவிப்பின்படி 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுமா? என்று பிஎட் படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே, 2 ஆண்டு படிப்பு காலத்துக்கான பாடத் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. பிஎட் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் பெறப்படுவது வழக்கம். அந்த வகையில், 2015-16-ம் கல்வி ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் பெறுவதற்காக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும்,
கல்லூரி கல்வி இயக்குநரகமும் கருத்துருவை உயர்கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டன. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் தேவதாஸிடம் கேட்டபோது, “மாணவர் சேர்க்கை நெறிமுறைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. படிப்பு காலம் ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா? என்பதை அரசு முடிவு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னரே இது குறித்த முழு விவரமும் தெரியவரும்” என்றார்.