லிட்டருக்கு 250 கி.மீ மைலேஜ் தரும் காரை உருவாக்கும் முயற்சியில் பி.எம்.டபிள்யூ
கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 250 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வந்துள்ள செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சமாக 27.62 கி.மீ மைலேஜ் தரும் கார்கள்தான் போக்குவரத்துக்கு வந்துள்ளன. இந்நிலையில் கார் மோகம் கொண்ட அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இறங்கியுள்ளது. அதாவது 400 மில்லி பெட்ரோலுக்கு 100 கி.மீ. மைலேஜ் தரும் காரை உருவாக்கும் முயற்சியில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வதந்திகள் உலா வருகின்றன.
பிம்மர் என்றழைக்கப்படும் இந்த கார் 4 சீட்களை கொண்டிருப்பதுடன், கார்பன் பைபரால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை கொண்டதாக இருக்கும். இதன் எடையும் கூட 1200 கிலோவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த காரின் என்ஜின் எதைக் கொண்டு இயங்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. எனினும் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூக்கு போட்டியாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஒரு லிட்டர் டீசலுக்கு 111 கி.மீ மைலேஜ் தரும் வோல்க்ஸ்வேகன் எக்ஸ்.எல்.1 என்ற காரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.