24 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கும் 32 வயது ஸ்ரேயா
ஸ்ரேயாவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். அழகான இரண்டு கண்களுடன், கிளாமரான தோற்றத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்தில் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஸ்ரேயாவின் நடன அசைவுகள் இன்றும் ரசிகர்கள் மனதில் பசுமையாகவே இருக்கும். அவர் செய்த ஒரே தவறு, வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியது, அத்துடன் அவரை நமது ஹீரோக்கள் கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டார்கள்.
தெலுங்கிலும் மார்க்கெட்டை இழந்த ஸ்ரேயாவிற்கு கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'மனம்'படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. தமிழில் அவர் நாயகியாக நடித்த ரௌத்திரம் படம் வெளிவந்து நான்கு வருடங்களாகிவிட்டது.
கடந்த சில வருடங்களில் தமிழ் - கன்னடத்தில் எடுக்கப்பட்ட சந்திரா படமும், தமிழ் - தெலுங்கில் எடுக்கப்பட்ட பவித்ரா படமும் வந்த சுவடே தெரியாமல் போய்விட்டன. தற்போது ஹிந்தியில் த்ரிஷ்யம் படத்தில் அஜய் தேவகன் ஜோடியாக நடித்து வருகிறார். படத்தில் ஸ்ரேயாதான் நாயகி என்று சொன்னாலும் 24 வயதான இஷிதா த்தாவுக்கு அம்மாவாக நடிக்கிறார். ஸ்ரேயா, இஷிதாவை விட 8 வயது தான் மூத்தவர். 32 வயதில் 24 வயதுப் பெண்ணுக்கு அம்மாவாக ஸ்ரேயா நடிப்பதன் காரணம் அந்தக் கதாபாத்திரம் தான், அதிலும் அஜய் தேவகன் ஜோடி என்றால் எப்படி நடிக்காமல் இருப்பார். இந்தப் படத்தை ஸ்ரேயா நிறையவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.