2100 முடிவதற்குள் பெட்ரோலுக்கு டாட்டா?
ஜெர்மனியில் உள்ள ஜக்ஸ்பிட்சே மலையில் நடந்த, உலகின் தொழில்மயமான நாடுகளுக்கான, ஜி7 உச்சி மாநாட்டில், ஒரு மாபெரும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 21ம் நூற்றாண்டின் முடிவுக்குள், அதாவது இன்னும், 85 ஆண்டுகளுக்குள், 'உலக பொருளாதாரத்தை கரியமில வாயு சுமை இல்லாத பொருளாதாரமாக்க' அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட, ஜி7 மாநாடு ஒப்புக் கொண்டுள்ளதாக, ஜெர்மனியின் அதிபர், ஏஞ்சலா மெர்க்கெல் அறிவித்தார்.
அதுமட்டுமல்ல... 'பசுமை இல்ல வாயுக்களால்' உலக சராசரி வெப்பம் உயர்வதை தடுத்து, தொழிற்புரட்சி நடப்பதற்கு முன்பிருந்த வெப்ப அளவில் வைத்திருக்கவும், ஜி7 நாடுகள் உறுதி பூண்டிருக்கின்றன. பாரிஸ் நகரில், 2015 இறுதியில் நடக்கவிருக்கும் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச பேச்சின் போது, தொழில்மயமான நாடுகள் இந்த இரு அறிவிப்புகளையும் எப்படி செயல்படுத்தப் போகின்றனர் என்று விவாதிக்க, இந்த அறிவிப்பு உதவிகரமாக இருக்கும் என்றும், சுற்றுச்சூழலியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால், கிரீன்பீஸ் போன்ற செயற்பாட்டு அமைப்புகள், 85 ஆண்டுகள் வரை ஏன் தள்ளிப் போட வேண்டும், 2050 வாக்கிலேயே, கார்பன் இல்லாத, புதுப்பிக்கத்தக்க எரிபொருளை மட்டுமே நம்பியிருக்கும் உலக பொருளாதாரத்தை கொண்டு வர முடியுமே என்று, ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன. அரபு நாடுகள் உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகள், இந்த அறிவிப்பைக் கேட்டு, திகில் அடைந்திருக்கின்றன.