ஸ்மித் எல்பிடபிள்யூ: நடுவர் மீது தோனி சாடல்!
ஸ்மித் எல்பிடபிள்யூ: நடுவர் மீது தோனி சாடல்!
சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடந்த ப்ளேஆஃப் போட்டியில் சென்னை தொடக்க வீரர் டிவைன் ஸ்மித், நடுவரின் மோசமான தீர்ப்பால் ஆட்டமிழந்தார். மலிங்கா வீசிய ஃபுல்டாஸ் பந்து, லெக் சைட் பக்கமாக சென்று ஸ்மித்தின் கால் தடுப்பில் பட்டது. இதைக் கண்டு நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் எல்பிடபிள்யூ முறையில் ஸ்மித்துக்கு அவுட் கொடுத்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நடுவரின் இந்த மோசமான தீர்ப்பை தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கடுமையாக விமரிசனம் செய்தார்கள். சர்வதேச நடுவர் இதுபோன்ற ஒரு தவறைச் செய்யக்கூடாது என்றனர். பெவிலியன் திரும்பிய ஸ்மித், டிவி ரீப்ளேயில் தன்னுடைய விக்கெட்டைக் கண்டு மிகவும் கோபமானார். தோனியிடம் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டினார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாயின.
சென்னை அணி போட்டியில் தோற்றபிறகு, தோனி பேட்டி அளித்தார். அப்போது நடுவரின் தீர்ப்பை கடுமையாக விமரிசித்தார். ஸ்மித் மோசமான தீர்ப்பால் அவுட் ஆனார். இது எந்த அளவிலும் சரியான தீர்ப்பு அல்ல என்றார்.
இதைத் தொடர்ந்து நடுவரை தவறாக விமரிசனம் செய்ததற்காக தோனிக்கு போட்டிச் சம்பளத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.