மின்சாரத்தின் தொடக்கம்
மின்சாரம் இல்லாத வாழ்க்கையைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான எந்திரங்கள் மின்சக்தியாலே இயங்குகின்றன.
மோட்டார் கார்கள், ரயில் இன்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி தேவையாக இருக்கிறது. 'எலக்ட்ரிக்' என்ற சொல் கிரேக்க மொழியான 'எலக்ட்ரான்' என்பதில் இருந்து தோன்றியது.
"ஆம்பர் " என்னும் பொருள் துணியின் மீது உராய்ந்தால் அதற்கு சிறு சிறு துண்டு பொருட்களை கவரும் சக்தி கிடைக்கிறது என்பதை கி.மு. 600-ம் ஆண்டில் கிரேக்க மக்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
மின்சாரத்தை கண்டுபிடித்த பெருமை குறிப்பிட்ட ஒருவரையும் சாராது. 'அலெக்சாண்டர் வோல்டா ' என்பவர்தான், மின்சக்தியை முதன் முதலில் உற்பத்தி செய்யும் 'எலக்ட்ரிக் செல் ' லை உருவாக்கினார். எலக்ட்ரிக் செல் உருவாக்கப்பட்ட பிறகு மின்சக்தியில் இருந்து வெப்ப சக்தி மற்றும் காந்த விளைவுகளை பெற முடிந்தது.
வோல்டா கண்டுபிடித்த செல்லில் துத்தநாகம், தாமிரதகடுகளை நீர்த்த கந்தக அமிலத்தில் மூழ்கி இருக்குமாறு வைத்தார். இவற்றுடன்
நேர் - எதிர்மின் கடத்தி கம்பிகளை இணைத்தால் மின்சக்தி கிடைக்கிறது. மின்சாரத்தை பொறுத்தவரை 1831-ம் ஆண்டில் மிகவும் புரட்சிகரமான செயலை செய்தவர் 'மிக்கேல் பாரடே' ஆவார். ஒரு காப்பிடப்பட்ட தாமிரக் கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர்கள் உருவாக்கப்பட்டன. பெஞ்சமின் பிராங்க்ளின் இடிதாங்கியை உருவாக்கி, மின்னலில் இருந்து மின்சாரம் பெற முடியும் என்று உணர்த்தினார்.
1867-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முதன் முதலாக வெற்றிகரமாக "டைனமோ" என்ற ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்சார மோட்டார்களும், டிரான்ஸ்பார்மர்களும் உருவாக்கப்பட்டன. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் சில பகுதிகளில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டன.1858-ம் ஆண்டில் அருவியில் சூழலும் டர்பைன்களை பயன்படுத்தி மின்சக்தியை பெரும் முறை அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீர்மின்சாரம் அனல்மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன.20-ம் நூற்றாண்டில் அணு சக்தி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அணுசக்தியால் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. சூரியசக்தி மூலம் முழுமையான மின்சக்தியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.