நெல்லை பூ வியாபாரி மகள் மாநில அளவில் முதலிடம்
நெல்லை பூ வியாபாரி மகள் மாநில அளவில் முதலிடம்
திருநெல்வேலியை சேர்ந்த பூ வியாபாரி முத்துகிருஷ்ணன் மகள் முத்துவேணி 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பாளையங்கோட்டை என்ஜிஓ-ஏ காலனி மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். வீதிவீதியாக சென்று பூ விற்பனை செய்து வருகிறார். பூ கட்டும் தொழிலில் இவருடன் இவரது மனைவி பார்வதி, மகள்கள் இசக்கியம்மாள், முத்துவேணி ஆகியோரும் உதவுகிறார்கள். பூ வியாபாரத்தில் ஈடுபடும் இந்த குடும்பத்திலிருந்து மாநில ரேங்க் பெறும் அளவுக்கு கல்வியில் உயர்ந்திருக்கிறார் முத்துவேணி.
ஜவஹர் நகரில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த முத்துவேணி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது:
அதிகாலையிலும், இரவிலும் கவனத்துடன் பாடங்களை படித்தேன். பள்ளியில் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் சிறப்பான பயிற்சியை அளித்தனர். பிளஸ் 2 வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தை தேர்வு செய்து படித்து, இதுபோல் மாநில அளவில் ரேங்க் பெறுவேன். மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றார் அவர்.
முத்துவேணியின் சகோதரி இசக்கியம்மாள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். பூ வியாபாரி முத்துகிருஷ்ணன் கூறும்போது, “நான் 4-ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். பிள்ளைகள்தான் தானாக ஆர்வத்துடன் படித்து சாதனை படைத்திருக்கிறார்கள்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
முத்துவேணியை பள்ளி தாளாளர் ஜோசெல்வி, தலைமையாசிரியை அருள்மேரி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர்.