ஐ.டி., துறையில் தொடரும் தற்கொலை சம்பவங்கள்
சென்னையில், வேலையின்றி தவித்த தகவல் தொழில்நுட்ப தம்பதியின் தற்கொலை முடிவு, கவர்ச்சி கரமான அத்துறையின், மற்றொரு பக்கத்தை, மீண்டும் உலகுக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது.
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த, முன்னாள் ஐ.டி., நிறுவன ஊழியர் ராதாகிருஷ்ணன், வேலையில்லாத விரக்தியில், குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார். தன்னுடன் பணிபுரிந்த, ஜாக்குலினை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆறு மாத குழந்தை உள்ளது.
இருவருக்கும் வேலை இல்லை. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில், ஜாக்குலின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ராதாகிருஷ்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் தான், இந்த சம்பவம் நடந்தது.இளவயதினரும், பெற்றோரும், அதிகம் விரும்பக் கூடிய துறையாக, ஐ.டி., இருந்தாலும், நிச்சயமற்ற தன்மையும், மன அழுத்தம் நிரம்பியதாகவும் உள்ளது.
இதுகுறித்து, ஐ.டி., ஊழியர்கள் அமைப்பைச் சேர்ந்த, க.கற்பக விநாயகம் கூறியதாவது: சென்னையில், ராதாகிருஷ்ணன் வேலை செய்துவந்த நிறுவனம் தான், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பியது. பின், சென்னைக்கு வரவழைத்து, ஆட்குறைப்பின் ஒரு பகுதியாக, பணிநீக்கம் செய்தது. அவரது மனைவிக்கும் வேலை இல்லை. பொருளாதார நெருக்கடியும், மன அழுத்தமும், ஏற்பட்டதாலேயே, சச்சரவு ஏற்பட்டிருந்தது. டி.சி.எஸ்., சிண்டல், போன்ற பல ஐ.டி., நிறுவனங்கள், அதிக அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு, 25 ஆயிரம் பேர், இப்படி பணியை இழக்கின்றனர். அவர்களில் சிலர், குறைந்த ஊதியத்துக்கு வேறு அலுவலகங்களுக்கு சென்றாலும் மற்றவர்கள், தவித்து வருகின்றனர்.
பலருக்கு மனநிலை பாதித்துவிட்டது. அதிக ஊதியம் வாங்குவோரை அனுப்பி விட்டு, குறைந்த ஊதியத்தில் ஆட்களை நியமிக்கின்றனர்.
டி.சி.எஸ்., நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், 'ஐ.டி., நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்துமா' என, தமிழக அரசிடம், சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது.நாங்களும், தொழிலாளர் துறையை, பலமுறை அணுகி விட்டோம்; ஒரு முன்னேற்றமும் இல்லை. அரசு தலையிட்டு, வேலையிழந்தோருடன், கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, நல்ல தீர்வைக் காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.