முடக்குவாதம் பாதித்தவர்களும் மொபைல் இயக்கலாம்
கை - கால் முடங்கியவர்கள், ஊனமுற்றோர் சுலபமாக ஸ்மார்ட் போனை இயக்க உதவும் சிறப்பு அப்ளிகேசன் தயாராகிவிட்டது.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கரங்கள் மற்றும் ஊனமுற்றோரின் கைகள், மற்றவர்கள் அனுபவிக்கும் ஸ்மார்ட் போன் சேவைகளை பயன்படுத்த உகந்ததாக இருப்பதில்லை. இவர்களும் ஸ்மார்ட் போன்களின் இனிமையை அனுபவிக்க வசதியாக தென்கொரியாவின் ஆய்வாளர்கள் டூவெல் ( Dowell ) என்ற பெயரில் ஒரு அப்ளிகேசனை உருவாக்கி இருக்கிறார்கள்.
இது தகவல்களை உள்ளீடு செய்ய பல சிறப்பு வசதிகளை கொண்டது. அதாவது டிராக்பால் மவுஸ், ஹெட் ட்ராக்கிங் கேமரா, மவுத் ஸ்டிக் போன்ற தொழில்நூட்பங்கள், பலவிதங்களில் உடல் உறுப்பு முடங்கியவர்களும் ஸ்மார்ட் போனை இயக்க உதவி புரிகிறது.
மவுத் ஸ்டிக் என்பது விளையாட்டிற்கு உதவும் ஸ்டிக் போலவே வாயின் உதவியுடன் தொடுதிரையை தொட்டு ஸ்மார்ட் போனை இயக்க உதவுகிறது.
ஹெட் ட்ராக்கிங் கேமரா வசதியில் தலையில் ஒட்டிக்கொள்ளக்கூடிய ஸ்டிக்கர் உள்ளது. இதில் உள்ள சென்சார் கருவியானது தலையை அசைப்பதன் மூலம் ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவால் உரைப்பட்டு ஹர்சரை இயக்க உதவுகிறது. ஹர்சர் ஓரிடத்தில் அசையாமல் சில வினாடிகள் நின்றால், அந்த வசதி இயங்கத் தொடங்கிவிடும்.
கைகளில் சில விரல்களை மட்டும் இயக்க முடிந்தவர்கள் டிராக்பால் எனும் சிறு பந்தின் மூலமாக போன்களை இயக்கலாம். இந்த பந்தை சுழற்றுவதன் மூலம் ஸ்மார்ட் போன் ஹர்சர் நகரும். எளிதாக பெரிதாக்கிப் பார்க்க, தாவிச் செல்ல வசதியாக இந்த அப்ளிகேசன் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
சியோல் நகரில் நடந்த 'கம்ப்யூட்டர் - ஹியூமன் இன்டராக்சன் கான்பரன்ஸ் 2015 ' எனும் கருத்தரங்கில் இந்த அப்ளிகேசன் அறிமுகம் செய்யப்பட்டது. சியோல் தேசிய பல்கலைகழக மாணவர் ஆன் ஹியூ ஜின் மற்றும் குழுவினர் இதை உருவாக்கி, செய்முறை விளக்கம் அளித்தனர்.
முன்பின் செல்போன் உபயோகிக்காத, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 8 பேரைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்து இந்த அப்ளிகேசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சாம்சங் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்த அப்ளிகேசனை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.