இரவில் இவற்றை தவிர்த்திடுங்கள்
இரவில் இவற்றை தவிர்த்திடுங்கள் !
நாம் உண்பதெல்லாம் உடலுக்குச் சக்தி அளிப்பதற்குத்தான் என்றாலும்,
வேலைக்கு ஏற்ப உணவின் அளவும், வகைகளும் இருப்பது நல்லது.
குறிப்பாக இரவு உணவில் நாம் உடல்நிலையையும் கருத்தில்
கொள்ளவேண்டும். காரணம், சில உணவுகளை இரவில் உண்டால்,
செரிமானப் பிரச்சனையால் சிரமப்பட நேரிடும்.
இரவு நேரங்களில் ' பார்ட்டி ' போன்றவற்றுக்குச் செல்பவர்கள், அசைவ
உணவுகளை ஒரு கை பார்க்க ஆசைப்படுவது வழக்கம். ஆனால் இந்தப்
பழக்கத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. காரணம்
அசைவ உணவுகள் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட
ஆகக்கூடும். அதனால் செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லை, ஏற்பட்டு,
இரவில் தூங்க முடியாமல் போகும். அசைவ உணவுகளை மதிய
நேரத்திலோ,மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது.
எண்ணெய் நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால்
ஜீரணமாக நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த
8 மணி நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும்
ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது
நல்லதல்ல இதனால் பிற்காலத்தில் தொடர் ஜீரணகோளாறு பிரச்சனைகள்
ஏற்படக்கூடும்.
இரவில் நீர்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர்
கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இவற்றை நீரிழிவுக்காரர்கள் சுத்தமாக
சாப்பிடக் கூடாது. பூசணி, புடலை, முட்டைக்கோஸ், போன்ற காய்கறிகள்
சாப்பிட்டாலும் இதே பிரச்சினைதான். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கும்.
காபியில் உள்ள காபீன் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை
உருவாக்கும். எனவே இது உங்களுக்கு காலை வேளைகளில் வயிற்று
உபாதைகள் ஏற்பட காரணமாகி விடும். எனவே, இரவு நேரங்களில் காபி
குடிப்பதை தவிர்த்து விடுங்கள். மிதமான சூட்டில் பால்
குடிக்கலாம்.