பூகம்பம் குறித்து செல்போனில் எச்சரிக்கை
பூகம்பம் எனப்படும் நிலநடுக்கம் ஏற்படப்போவது குறித்து எச்சரிக்கை செய்யும் புதிய அப்ளிகேஷனை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்மார்ட் போன்கள் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பெற முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
அதாவது ஜி.பி.எஸ். உள்ள ஸ்மார்ட் போன்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்துக்கு முன்பாகவே உணரும் தன்மையைப் பெற்றிருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஓர் அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் நிலநடுக்க எச்சரிக்கைக் கருவிகளை கட்டமைத்துப் பராமரிக்க ஏகப்பட்ட செலவாவதால், உரிய நேரத்தில் நிலநடுக்க எச்சரிக்கையைத் தெரிவிக்க முடிவது இல்லை.
இதற்காக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில் புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி, நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கையை கொடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.
இது தொடர்பாக அந்த விஞ்ஞானிகள் குழு கூறுகையில், இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால்நிலநடுக்கம், சுனாமியால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும். மேலும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும் என்கின்றனர்.
அதேசமயம் சிறிய அளவிலான நிலநடுக்கத்தை ஜி.பி.எஸ். ஸ்மார்ட் போன்களால் உணர முடியாது என்றும், மிதமான மற்றும் தீவிரமான நிலநடுக்கத்தையே அவற்றால் முன்னதாகவே உணர்ந்து எச்சரிக்கை செய்ய முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.