டெஸ்ட் தொடருக்காக சென்னை அணியை விட்டுச் செல்லும் மெக்கல்லம்!
இந்த ஐபிஎல்-லில் சென்னை
அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு மெக்கல்லம்
பெயரை அனைவரும் சொல்லிவிடுவார்கள். சென்னை அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர்,
மெக்கல்லம் தான். 419 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்த ஐபிஎல்-லிலும் நான்காம் இடத்தில்
உள்ளார். ஸ்டிரைக் ரேட் - 165.61! இதுவரை 23 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கெயிலுக்கு
அடுத்து அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சென்னையில், ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த
போட்டியில் மிகக் கடினமான சூழலிலும் தாக்குப் பிடித்து ஆடி, 81 ரன்கள் எடுத்தார்
மெக்கல்லம். இந்த மேட்சில், இரு தரப்பிலும் மெக்கல்லத்துக்கு அடுத்து அதிக ரன்கள்
எடுத்தவர் டுபிளெஸ்ஸி. 29 ரன்கள்! இப்படி யாருமே ரன்கள் எடுக்க கஷ்டப்பட்ட ஒரு
பிட்சில் 4 சிக்ஸர்கள் உள்பட 61 பந்துகளில் 81 ரன்களைக் குவித்து சென்னை அணிக்குப்
பெரிய உதவி செய்துள்ளார் மெக்கல்லம்.
இவர் இருந்தால் சென்னை அணி தனி பலத்துடன்
உள்ளது என்பதே உண்மை. ஆனால், இந்த சவுகரியம் எல்லாம் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு
மட்டும்தான். ப்ளேஆஃப்புக்குப் பிறகு மெக்கல்லம் இந்த ஐபிஎல்-லில்
விளையாடமாட்டார். அவருக்கு அதைவிடவும் முக்கிய கடமை ஒன்று காத்திருக்கிறது.
நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்குச்
சுற்றுப் பயணம் செல்லவுள்ளது. லார்ட்ஸில் மே 21-ம் தேதி முதல் டெஸ்ட்
ஆரம்பமாகிறது. இதனால் ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்தபிறகு அடுத்த நாளே மெக்கல்லம்
லண்டன் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னை அணி, மே 16-ம் தேதி, மொஹலியில்
பஞ்சாப்புக்கு எதிராக தனது கடைசி லீக் மேட்ச்சை ஆடவுள்ளது. இதற்குப் பிறகு
மெக்கல்லம், இங்கிலாந்துக்குப் பறந்துவிடுவார். ப்ளேஆஃப்பில் இடம்பெறமாட்டார்.
மெக்கல்லமுக்குப் பதிலாக சென்னை அணியில் மைக்கேல் ஹஸ்ஸி இடம்பெறுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
பல பேட்ஸ்மேன்கள் அவுட் ஆஃப் ஃபார்மில் உள்ள
நிலையில் ப்ளேஆஃப்பில் மெக்கல்லமும் இல்லாததால் பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளது
சென்னை அணி.