வெள்ளையில் இருக்குது வில்லங்கம்!
கரும்புச்சாறிலிருந்து
பரிசுத்தமாகத் தயாராகிற சர்க்கரையைத்தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்
என்று நினைத்தால், உலகத்திலேயே நாம்தான் நம்பர் 1 அப்பாவி. ‘வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்ற பழைய பழமொழியைப்
போலவே, வெள்ளையாக நம் மனதைக் கொள்ளை
கொள்ளும் சர்க்கரையில் இருக்கிறது அத்தனை வில்லங்கம். சர்க்கரைப்பாகை
வெண்மை யாக்க ப்ளீச்சிங் பவுடர்,
அழுக்கு நீக்குவதற்கு பாஸ்பாரிக் அமிலம் என்று தொடங்கும்
வேதியியல் பொருட்களின் பட்டியல் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா,
சுண்ணாம்பு என்று ஆஞ்சநேயர் வால்
கணக்காக நீள்கிறது. இத்தனை கட்டத்துக்குப் பிறகு
தயாராகும் சர்க்கரையில் மிச்சம் இருப்பது கார்பன்
எனும் கரிதான்.
‘‘முதலில்
ஒரு விஷயம். நல்ல சர்க்கரையாக
இருந்தாலும் சரி... கெட்ட சர்க்கரையாக
இருந்தாலும் சரி... நாள் ஒன்றுக்கு
15 கிராமுக்கு மேல் - அதாவது, மூன்று
டீஸ்பூனுக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்தக்
கூடாது. ஆனால், இந்த அளவை
நாம் டீ, காபி சாப்பிடுவதிலேயே
தாண்டி விடுகிறோம். அதிலும் ஒரு நாளைக்கு
3-4 காபிக்கு மேல் சாப்பிடுகிற பழக்கமெல்லாம்
இப்போது பலரிடம் வந்துவிட்டது.
இதோடு,
ஐஸ்க்ரீம், கேக், சாக்லெட், ஸ்வீட்ஸ்
வழியாக நாம் சாப்பிடும் சர்க்கரையின்
அளவும் அதிகம். ஹோட்டல், பேக்கரி
போன்ற வெளியிடங்களில் சாம்பார், சிப்ஸ் என கார
உணவுகளில் கூட சுவைக்காக சர்க்கரையை
சேர்க்கிறார்கள். இதுபோன்ற
கட்டுப்பாடற்ற சர்க்கரை நுகர்வால், அமெரிக்கா போன்ற நாடுகளில் 100 கிராம்
வரைகூட ஒரே நாளில் சாப்பிடுகிறார்கள்.
அதனால்தான் அமெரிக்காவில் நோய்களும் நிறைய ஏற்படுகின்றன. வெளிநாட்டு
வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால், நம்முடைய வாழ்க்கையிலும், அதேபோன்ற நோய்கள் வர ஆரம்பித்துவிட்டன.
50 வருடங்களுக்கு முன்பெல்லாம் நாம் இத்தனை நோய்களைப்
பற்றிக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம்.
ஆனால்,
நம் கலாசாரத்துக்கும் உணவுப்பழக்கத்துக்கும் எதிரான வாழ்க்கைமுறையால் புதிய
மாத்திரை, மருந்துகளின் பெயர்கள் கூட இப்போது நமக்குத்
தெரிந்திருக்கிறது. இதற்கெல்லாம் சர்க்கரை மட்டும்தான் காரணம் என்று சொல்வதாக
அர்த்தம் கிடையாது. சர்க்கரை முக்கிய காரணமாக இருக்கிறது
என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிலும், வேதிப்பொருட்களின் கலப்படம் நிறைந்த வெள்ளை சர்க்கரையை
தவிர்ப்பதே நல்லது. அதற்கு மாற்றாக
வெல்லம், கருப்பட்டி, Unrefined Sugar போன்ற சர்க்கரை வகைகளைப்
பயன்படுத்தலாம்
பொது மருத்துவரான சுப்புலட்சுமி இந்தப்
பிரச்னையை இன்னும் ஆழமாக விளக்குகிறார்...
‘‘உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்,
புரதம் போன்றவற்றின் மூலம்தான் நாம் செயல்படுவதற்குத் தேவையான
சக்தி கிடைக்கிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைப் போல அளவுக்கு அதிகமாக
நம் உடலுக்குக் கிடைக்கும் சக்தியும் உடலுக்குக் கேடாகத்தான் மாறுகிறது. அதிலும் வெள்ளை சர்க்கரையின் அதிக
பயன்பாடும், அதனால் ஏற்படும்
தீமைகளையும் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை.
அதில் முக்கியமான தாக நான் சொல்ல
விரும்புவது நீரிழிவு. உலக அளவில் 10 நீரிழிவு
நோயாளிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்.
முன்பு 40 வயதுக்கு மேல்தான் நீரிழிவு பிரச்னை வந்தது.
ஆனால்,
இன்று 20 வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுவதைப் பார்க்கிறோம்.
சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம் என்று
நன்கு படித்த சிலரே கேட்கிறார்கள்.
தேவைக்கு அதிகமான சர்க்கரை உடலில்
சென்று கெட்ட கொழுப்பாக மாறி,
பருமனை உண்டாக்கிவிடுகிறது. இதனால் கணையத்தில் இருந்து
இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறைய ஆரம்பிக்கும்.
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின்
குறைந்து விட்டால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகமாக
உயரும். இப்படித்தான் சர்க்கரை நோய் உருவாகிறது.
இன்சுலின்
சுரப்புக்காக டாக்டர்கள் மாத்திரைகள் கொடுத்தாலும் சில வருடங்களுக்குத்தான் அந்த
மாத்திரைகள் உதவி செய்யும். அதன்பிறகு,
இன்சுலின் ஊசிதான் போட்டுக் கொள்ள
வேண்டியிருக்கும். சர்க்கரை நோயைத் தொடர்ந்து இதய
நோய்கள், ரத்த அழுத்தம், பார்வை
இழப்பு என்று வரிசையாக நோய்கள்
நம்மைத் தாக்கும் அபாயமும் உண்டு. இதனால் நேரம்,
பொருளாதாரம் என்று பலவகையிலும் நம்
வாழ்க்கை பாதிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க வாழ்க்கைமுறையை மாற்றுவதோடு, சர்க்கரைப் பயன்பாட்டைக் குறைத்துப் பழக வேண்டும். இந்தப்
பழக்கத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கொண்டு வர வேண்டும்.
குழந்தைகள் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளையே விரும்புவார்கள்.
குழந்தைகள்
அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர் தவறான உணவுப் பழக்கத்தை
ஊக்குவிக்கக் கூடாது. அப்படி கட்டுப்படுத்தாத
காரணத்தால்தான் சிறு வயதிலேயே பருமனாகி
பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். ஜூஸ்
வகைகளில் சர்க்கரை சேர்ப்பதும் தவறான பழக்கம். இயற்கையான
சர்க்கரை பழங்களில் நிறைய இருக்கிறது. அதில்
இன்னும் சர்க்கரையை சேர்ப்பது ஆரோக்கியக் கேட்டையே உருவாக்கும். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில்
சர்க்கரைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் சர்க்கரையின் பெரிய
தீமைகள் நம்மை அண்டாமல் பாதுகாக்க
முடியும்.
அப்பா,
அம்மா இரண்டு பேருக்கும் சர்க்கரை
நோய் இருந்தால் குழந்தைக்கு கண்டிப்பாக நீரிழிவு வரும்தான். ஆனால், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி
என வாழ்க்கைமுறையை சீர்படுத்திக் கொண்டால் 40 வயதில் வரும் சர்க்கரை
நோயை இன்னும் 10 வருடங்களுக்கு தள்ளிப் போட முடியும்.
போட்டி மிகுந்த இன்றைய வாழ்க்கையால்
மன அழுத்தத்தாலும் பலருக்கு சிறு வயதிலேயே நீரிழிவு
வந்துவிடுகிறது. அதனால், 25 வயதுக்குப் பிறகு, வருடம் ஒருமுறை
நீரிழிவு பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்!’’